உ.பி., ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : விபத்திற்கான காரணம் தெரியாததால் திகைப்பு
உ.பி., ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : விபத்திற்கான காரணம் தெரியாததால் திகைப்பு
ADDED : ஜூலை 11, 2011 11:38 PM

பதேபூர் : உ.பி.,யில் நடந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 63 ஆக அதிகரித்துள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 'டில்லி - ஹவுரா வழித்தடம் சீரமைக்கப்பட்டு, நாளை (இன்று) காலை, ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்' என, ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து டில்லி நோக்கி சென்று கொண்டிருந்த கல்கா எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம், உ.பி., மாநிலம் பதேபூர் அருகே தடம் புரண்டது. இதில், ரயிலின் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. இன்ஜினுக்கு அடுத்து இருந்த பொதுப் பெட்டி, 'ஏசி' பெட்டிகள் உருக்குலைந்தன. அதில் இருந்தவர்களை மீட்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று, ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் இருந்து, 25 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 63 ஆக அதிகரித்துள்ளது. 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள், கான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில்வே குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், 180 ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் சார்பில் விபத்து நடந்த இடத்தில், தற்காலிக மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில், 10 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டில்லி - ஹவுரா வழித் தடத்தில் செல்லும், 34 ரயில்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பதேபூர் மாவட்ட எஸ்.பி., ராம் பரோஸ் கூறுகையில், ''இதுவரை, 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில், சுவீடனைச் சேர்ந்த மேலும் சிலர் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம்,'' என்றார்.
ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் கூறியதாவது: மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நாளை (இன்று) காலைக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். இதன்பின், டில்லி - ஹவுரா வழித் தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். விபத்து குறித்து , ரயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் (லக்னோ) பிரஷாந்த் குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். ரயில் தண்டவாளத்தில் விரிசலோ, நாச வேலையோ நடக்கவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் ரயில் வந்தபோது, இன்ஜின் குலுங்கியதாகவும், பெரிய அளவில் புகை வெளியேறியதாகவும், அதன்பின், ரயில் தடம் புரண்டதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சிக்னல் வழக்கம் போல் இயங்கியதும் தெரியவந்துள்ளது. இதுவரை மீட்கப்பட்ட உடல்களில், 21 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.இவ்வாறு மிட்டல் கூறினார்.
இதற்கிடையே, ரயிலில் இருந்து மீட்கப்பட்ட, 167 பயணிகள், சிறப்பு ரயில் மூலம், டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில், சமர் என்ற ஐந்து வயது சிறுவனும் அடக்கம். விபத்து நடந்தது குறித்து, தங்கள் உறவினர்களிடம், அதிர்ச்சி விலகாத கண்களுடன், அவர்கள் விவரித்தனர். காயத்துடன் வந்தவர்களுக்கு, டில்லி ரயில்வே ஸ்டேஷனில் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். விபத்து நடந்த இடத்துக்கு, உ.பி., கவர்னர் பி.எல்.ஜோஷி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எப்படி நடந்தது விபத்து?
* விபத்து நடந்து, இரண்டு நாட்களாகியும், அதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.
* மால்வா ரயில்வே ஸ்டேஷனில், கல்கா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் இல்லை. இந்நிலையில், மணிக்கு 108 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்துவதற்காக, எமர்ஜென்சி பிரேக்கை உபயோகித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
* 'எமர்ஜென்சி பிரேக்கை உபயோகித்தால், ரயில் தடம்புரளுவதற்கு வாய்ப்பு இல்லை' என, பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியானால், ரயிலின் மற்ற பெட்டிகளில் உள்ள, 'ஏர் பிரேக்' செயல் இழந்து விட்டதா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
* ரயில் தண்டவாளத்தில், நாசவேலை செய்யப்பட்டிருந்ததா?
* கடந்த, 12 மாதங்களில், 90 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமை மிகு, இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு தன்மை, இந்த விபத்துகளால் கேள்விக் குறியாகி விட்டதாக, பயணிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.