டிரான்ஸ்பார்மர் திருட்டால் இருளில் மூழ்கிய உ.பி., கிராமம்
டிரான்ஸ்பார்மர் திருட்டால் இருளில் மூழ்கிய உ.பி., கிராமம்
ADDED : ஜன 09, 2025 03:08 AM

புதான்: உத்தர பிரதேசத்தில் டிரான்ஸ்பார்மர் திருடுபோனதால், கிராமத்தில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்டோர், 25 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் சோரா கிராமம் உள்ளது. இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தின் உகைதி பகுதியில் 250 கிலோவாட் டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு இருந்தது.
இதன் வாயிலாக, கிராமம் முழுதும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது.
மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த டிரான்ஸ்பார்மரை கழட்டிய மர்ம நபர்கள், அதிலிருந்த முக்கிய பாகங்களை திருடிச் சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் புகாரளித்ததை அடுத்து, மின்சார வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இருப்பினும், கடந்த 25 நாட்களாக, புது டிரான்ஸ்பார்மர் நிறுவப்படாததால், சோரா கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.
இது குறித்து கிராமத் தலைவர் சத்பல் சிங் கூறுகையில், “மின்சாரம் இன்றி குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்வு நடக்கவுள்ள நிலையில், மின்சாரம் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.
“செல்போன்கள் பயன்படுத்த முடியவில்லை. மின் மோட்டார்களை இயக்க முடியாததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் விரைவில் தீர்வு காண வேண்டும்,” என்றார்.
இது குறித்து உகைதி துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் அசோக் குமார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட கிராமத்தின் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வந்து கொண்டிருந்த கம்பி உட்பட அனைத்தும் திருடப்பட்டுள்ளதால், புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.