வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!
வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!
ADDED : பிப் 16, 2025 11:59 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் வரதட்சணை தர மறுத்த மருமகளுக்கு, அவரது மாமியார் எச்.ஐ.வி., வைரஸ் தொற்று ஊசியை செலுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கோவைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஹரித்வாரை சேர்ந்த இளைஞருக்கும், கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார்கள் ரூ.15 லட்சம் ரொக்கமும், லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
மேலும் ரூ.25 லட்சம் ரொக்கம் கேட்டு மணமகன் வீட்டார் அழுத்தம் கொடுத்துள்ளனர். பின்னர் இந்த விஷயம் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களில் வரதட்சணை கேட்டு மாமியார் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர், மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து பெண்ணின் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளுக்கு, அவரது மாமியார் எச்.ஐ.வி., வைரஸ் ஊசியை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.