ADDED : மே 02, 2025 01:29 AM
ஆர்.கே. புரம்: தென்மேற்கு டில்லியில் வேகமாக வந்த கார் மோதி உ.பி.,யை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
ஆர்.கே. புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரிங் ரோட்டில் கடந்த மாதம் 26ம் தேதி வேகமாக வந்த கார் மோதி, சாலையை கடக்க முயன்ற இளைஞர் படுகாயமடைந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று, இளைஞரை மீட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பலியான இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆதார் அட்டையில் இருந்து அவர், உ.பி.,யை சேர்ந்த முலு, 34, என்பது தெரிய வந்தது. விபத்து பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் விபத்தை ஏற்படுத்திய காரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
தீவிர விசாரணையின் இறுதியில் பாஸ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மேத்தாவை, 55, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு முலுவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.