ரீசார்ஜ் செய்யாத மொபைல் எண்களில் வரும் ஏப்ரல் 1 முதல் யு.பி.ஐ., இயங்காது
ரீசார்ஜ் செய்யாத மொபைல் எண்களில் வரும் ஏப்ரல் 1 முதல் யு.பி.ஐ., இயங்காது
ADDED : மார் 22, 2025 02:16 AM

புதுடில்லி: நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் செயலிழந்த நிலையில் உள்ள மொபைல் எண்கள் மற்றும் வேறு சில மொபைல் எண்களில், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து யு.பி.ஐ., எனப்படும் மொபைல் பணப்பரிவர்த்தனை செயலி இயங்காது என, அறிவித்துள்ளனர்.
நம் நாட்டில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை எளிதாக்க, யு.பி.ஐ., முறையை 2016-ல் தேசிய பணப்பரிமாற்றக் கழகம் துவக்கியது. இதன் வாயிலாக பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை, மொபைல் எண்ணுடன் இணைத்து ஜிபே, போன்பே உள்ளிட்ட யு.பி.ஐ., செயலி உதவியுடன் எளிதாக பணம் அனுப்பவும், பெறவும், பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும்.
யு.பி.ஐ., வாயிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மொபைல் எண் மிகவும் முக்கியம். இதன் வாயிலாகவே வங்கி கணக்கு அடையாளம் காணப்படும். இந்நிலையில் குறிப்பிட்ட மொபைல் எண்களில் யு.பி.ஐ., வசதி ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இயங்காது என, தேசிய பணப்பரிமாற்றக் கழகமான என்.பி.சி.ஐ., அறிவித்துள்ளது. மோசடியை தடுப்பதற்காக இந்த நடைமுறையை அமல்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
அதன்படி, பின்வரும் எண்களில் யு.பி.ஐ., செயல்பாடு தடை செய்யப்படும்:
ரீசார்ஜ் செய்யாததால் அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் ஆகிய எந்த சேவையும் இல்லாத எண்ணுடன் யு.பி.ஐ., பயன்படுத்துவோர்.
மொபைல் எண்ணை மாற்றிவிட்டு தங்கள் வங்கி கணக்கில் தகவலை மாற்றாதவர்கள்.
வங்கி கணக்கில் எண்ணை நீக்காமல் தங்கள் மொபைல் எண்ணை சரண்டர் செய்தவர்கள்.
யு.பி.ஐ.,-யில் உள்ள மொபைல் எண், வேறு யாருக்கேனும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருத்தல்.
இவ்வாறு உள்ள எண்களுடன் யு.பி.ஐ., செயலியை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும்.
அவர்கள் உடனடியாக வங்கிக் கிளையை அணுகி, செயல்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை தங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்தால் தடையில்லாமல் சேவையை பெறலாம்.