யுபிஎஸ்சி தேர்வு: தேசிய அளவில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, ராஜா மொகைதீன் சாதனை
யுபிஎஸ்சி தேர்வு: தேசிய அளவில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, ராஜா மொகைதீன் சாதனை
UPDATED : மார் 06, 2026 10:55 PM
ADDED : மார் 06, 2026 03:22 PM

புதுடில்லி: கடந்த 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். 7 வது இடத்தை சென்னையை சேர்ந்த ராஜா மொகைதீன் 7 வது இடத்தில் உள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.
1,087 பதவிகளை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வு நடந்தது . ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடந்தது. நேர்முகத்தேர்வு கடந்த மாதம் நடந்தது.
இந்நிலையில் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 958 பேரை சிவில் சர்வீஸ் பதவிகளில் பணியமர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்வில் தேசிய அளவில் அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ இரண்டாவது இடத்தையும்
ஆகான்ஷ் துல் 3வதுஇடத்தையும் பிடித்துள்ளார்.
ஏற்கனவே, ராஜேஸ்வரி சுவீ டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று திண்டுக்கல்லில் துணை கலெக்டர் ஆக பணியில் உள்ளார். இவர் நான் முதல்வர் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றுள்ளார்.
தேசிய அளவில் 7 வது இடத்தை சென்னையைச் சேர்ந்த ராஜா மொஹைதீன் பிடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் தற்போதுதான் இடம்பிடித்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ஸ்ருதி என்பவர் 18 வது இடத்தை பிடித்துள்ளார்.
முதலிடம் பெற்ற அனுஜ் அக்னிஹோத்ரி ராஜஸ்தானை சேர்ந்தவர். ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர்.
தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
தலைவர்கள் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி
பிரதமர் மோடி
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிவில் சர்வீஸ் தேர்வில் விரும்பிய முடிவைப் பெற முடியாதவர்களுக்கு இதுபோன்ற தருணங்கள் கடினமாக இருக்கலாம். இருப்பினும் பெரிய பயணத்தில் இது ஒரு படி மட்டுமே . எதிர்காலத் தேர்வுகளிலும், நமது நாட்டிற்கும் நீங்கள் பங்களிக்கக்கூடிய பல வழிகளிலும் வாய்ப்புகள் நம் முன்னாள் உள்ளன. முன்னோக்கிச் செல்லும் பாதைக்கு எனது வாழ்த்துகள்.
முதல்வர் ஸ்டாலின்
நான் முதல்வர் பற்றி அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி பெரும் ஊக்கமளிக்கிறது. நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்றால், இதன் அடுத்த வெர்சன் எப்படி இருக்கும் என நீங்களே பாருங்கள். நமது தமிழக இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை
2025ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்த அனுஜ் அக்னிஹோத்ரி, ராஜேஸ்வரி சுவீ ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.அவர்களின் அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் எண்ணற்ற இளைஞர்களை பெரிய கனவுகளைக் காணவும், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் நமது மகத்தான தேசத்திற்கு சேவை செய்யவும் ஊக்குவிக்கும்.இந்த மதிப்புமிக்க தேர்வில் தேர்ச்சி பெற்ற 958 வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் எதிர்காலம், அவர்களின் திறமையான கைகளில் பாதுகாப்பாக உள்ளது.

