பீஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் அதிர்ச்சி
பீஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் அதிர்ச்சி
ADDED : நவ 23, 2025 06:27 PM

புதுடில்லி: பீஹாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் மருத்துவமனையின் குழுவினரும், டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் குழுவினரும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வு என்பது பீஹாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பால் பற்றியதாகும்.
2021ம் ஆண்டு அக்டோபர் முதல் 2024ம் ஆண்டு ஜூலை வரை இந்த குழுவினர் ஆய்வு நடத்தினர். பீஹாரில் உள்ள போஜ்பூர், சமஸ்திபூர். ககாரியா, பெகுசராய், கதிஹார், நாளந்தா ஆகிய மாவட்டங்களில் வசித்து வரும் 17 வயது முதல் 35 வயது வரை உள்ள பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பால் மாதிரிகளை சேகரித்தனர்.
இவர்களின் ஆய்வு முடிவுகள் தான் இப்போது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட அனைத்து தாய்ப்பால் மாதிரிகளிலும் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த யுரேனியத்தின் செறிவானது, 0 முதல் 5.25 மைக்ரோகிராம் வரை இருந்துள்ளது.
சராசரியாக ககாரியாவில் சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரிகளில் இந்த அளவு அதிகமாகவும், நாளந்தாவில் மிக குறைவாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. யுரேனியம் பாதிப்பால் பீஹாரில் 70 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது;
தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம், சுற்றுச்சூழல் மாசுபாடுதான். ஆழ்துளை கிணற்று நீரை குடிக்க பயன்படுத்துவது, ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள். ரசாயன உரங்கள் போன்றவையே இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தாய்மார்களின் தாய்ப்பாலில் எப்படி யுரேனியம் இருந்துள்ளது என்பதன் மூலத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கி உள்ளோம். தாய்மார்களின் வயிற்றில் உள்ள சிசுவானது, யுரேனியம் பாதிப்பால் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ஆய்வுக்குழுவினர் கூறினர்.
சாதாரணமாக தண்ணீரில் யுரேனியத்தின் அளவு என்பது லிட்டருக்கு 50 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்பது உலக சுகாதார அமைப்பின் அளவுகோல் என்பது குறிப்பிடத்தக்கது.

