தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ யுரேனியம்!

யுரேனியம்!

யுரேனியம்!


ADDED : ஆக 30, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உஸ்பெகிஸ்தான் நாட்டிடம் இருந்து வருகிறது... பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

தாஷ்கன்ட்: நம் நாட்டுக்கு நீண்ட கால அளவில் யுரேனியம் வினியோகிக்கும் ஒப்பந்தத்தில், உஸ்பெகிஸ்தான் கையெழுத்திட்டு உள்ளது. இது, நாட்டின் அணுசக்தித் திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷகவத் மிர்சியோயேவ் – பிரதமர் மோடி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக, உஸ்பெகிஸ்தானுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் தாஷ்கன்டில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷகவத் மிர்சியோயேவ் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, புலம்பெயர்ந்த இந்தியர்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், தாஷ்கன்டில் உள்ள அதிபர் மாளிகையில், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷகவத் மிர்சியோயேவை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். இதில், இரு தரப்பு உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, இந்தியா- – உஸ்பெகிஸ்தான் உத்திசார் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இந்தியாவின், ‘வளர்ந்த பாரதம்’ மற்றும் உஸ்பெகிஸ்தானின், ‘புதிய உஸ்பெகிஸ்தான்’ ஆகிய இரு நாடுகளின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், ராணுவம், வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு இணைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முடிவில், இந்தியாவுக்கு நீண்ட கால அளவில் யுரேனியம் வினியோகிக்கும் ஒப்பந்தத்தில் உஸ்பெகிஸ்தான் கையெழுத்திட்டது.

கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவுக்கு நீண்ட கால அளவில் யுரேனியம் வினியோகிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உஸ்பெகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. இது, மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று. உஸ்பெகிஸ்தான் தற்போது, ‘நியூ தாஷ்கன்ட்’ என்ற முற்றிலும் புதிய நகரத்தை உருவாக்கி வருகிறது. இதற்கு குஜராத்தின், ‘கிப்ட் சிட்டி’ ஒரு சிறந்த முன்மாதிரி. இத்திட்டத்தின் பின்னணியில் உள்ள திட்டமிடல், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட உஸ்பெகிஸ்தான் பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம். அவர்களை வரவேற்கத் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷகவத் மிர்சியோயேவ் கூறியதாவது:

இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளி. இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு முதன்முறையாக, 9,538 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கூட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, இரு நாடுகளையும் இணைக்கும் வகையில், வாரத்திற்கு, 14 நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த உறவில் கலாசார பரிமாணமும் உள்ளது. லால் பகதுார் சாஸ்திரி இந்திய கலாசார மையம், மஹாத்மா காந்தி இந்திய ஆய்வு மையம் ஆகியவை, இரு நாட்டு மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த உறவை வலுப்படுத்த, உஸ்பெகிஸ்தானில், 30 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கலாம். இது, சுற்றுலா, வர்த்தக பயணம் மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான நேரடி தொடர்புகளை மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்குக்கு நேற்று சென்றார். அங்கு, இன்று மற்றும் நாளை நடக்கும், 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

யோகா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு தாஷ்கன்டில், உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்நாட்டினருடன் சேர்ந்து யோகாசனங்களை செய்தார். இது குறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘உஸ்பெகிஸ்தானில் யோகா பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது, மக்களையும், கலாசாரங்களையும் ஒன்றிணைப்பதுடன், இந்தியா –- உஸ்பெகிஸ்தான் இடையேயான மக்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்துகிறது’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.



பிரதமருக்கு உயரிய விருது அதிபர் மாளிகையில் நடந்த பேச்சுக்கு பின், உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான, ‘ஒலி தரஜாலி தோஸ்ட்லிக்’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் ஷகவத் மிர்சியோயேவ் கவுரவித்தார். இதில், ‘தோஸ்டலிக்’ என்றால் நட்பு என, பொருள். விருதை பெற்ற பிரதமர் மோடி, நம் நாட்டு மக்களுக்கு அதை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். இதுவரை, 30க்கும் மேற்பட்ட நாடுகளின் உயரிய விருதை அவர் பெற்றுள்ளார்.



முக்கிய ஒப்பந்தங்கள்! * இந்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் உஸ்பெகிஸ்தான் நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ‘உஸ் ஆர்க்கைவ்’ முகமை இடையே ஆவண காப்பக பணிகளில் ஒத்துழைக்க ஒப்பந்தம் * ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள ஒப்பந்தம் * புவியியல் மற்றும் கனிமவளங்கள் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் * பொருளாதார மற்றும் நிதி உரையாடலை மேற்கொள்ள ஒப்பந்தம் * சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள ஒப்பந்தம் * உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம் * கூட்டாண்மை உறவுகளை நிறுவுவதற்காக, நம் நாட்டின் குஜராத்துக்கும், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் மாகாணத்துக்கும் இடையே ஒப்பந்தம்



அறிவிப்புகள் * இந்தியா – உஸ்பெகிஸ்தான் கூட்டணியை, விரிவான உத்திசார் கூட்டணியாக தரம் உயர்த்துதல் * ஆரல் கடல் பகுதியில் காடு வளர்ப்பு பணிகளுக்காக, 9.50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குதல் * தாஷ்கன்ட் மாநில ஓரியன்டல் ஆய்வுகள் பல்கலையில், ஐசி.சி.ஆர்., சமஸ்கிருத இருக்கை அமைத்தல் * நம் நாட்டின், யு.பி.ஐ., சேவை உஸ்பெகிஸ்தாலும் அறிமுகமாகிறது



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us