UPDATED : ஆக 29, 2025 10:50 AM
ADDED : ஆக 29, 2025 10:33 AM

புதுடில்லி: சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் பணவீக்க இலக்கு கட்டமைப்பை உருவாக்கிய பொருளியலாளர்களில் ஒருவர் உர்ஜித் படேல். கடந்த 2016ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது கவர்னராக பொறுப்பு வகித்தார். 2018ல், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தார்.
அதற்கு முன்பு, மத்திய வங்கியின் துணை கவர்னராகப் பணியாற்றிய இவர், பணவியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி, புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை, வைப்பு போன்ற துறைகளைக் கவனித்து வந்தார்.
கென்யாவில் பிறந்த இந்திய பொருளியலாளரான இவர், 30 ஆண்டுகளுக்கு முன்பே ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். முதலில் வாஷிங்டனில் பணியாற்றி வந்த இவர், 1992ல் ஐஎம்எப்-ன் டில்லிக்கு மாறுதலில் வந்தார். இந்த நிலையில், உர்ஜித் படேல் மீண்டும் ஐஎம்எப்-ன் செயல் இயக்குநராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.