என்ன விலை கொடுத்தேனும் விவசாயிகளை காப்பேன்; அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு அனுமதி கிடையாது; மோடி பதிலடி
என்ன விலை கொடுத்தேனும் விவசாயிகளை காப்பேன்; அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு அனுமதி கிடையாது; மோடி பதிலடி
UPDATED : ஆக 07, 2025 11:03 AM
ADDED : ஆக 07, 2025 10:48 AM

புதுடில்லி: ''மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை'' என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்த அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
டில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சர்வதேச மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய விவசாயிகள் நலனே எனக்கு முக்கியம். அதற்காக பெரிய விலையை கொடுக்க தயார். விவசாயிகளின் நலனே இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது.
தனிப்பட்ட முறையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் எந்த சமரசமும் இல்லை.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை தனது வாழ்க்கையின் நோக்கமாக சுவாமிநாதன் கொண்டிருந்தார்.சுவாமிநாதனின் அணுகுமுறைகள், கருத்துகள் இன்றும் இந்திய விவசாயத்தில் காணப்படுகின்றன. அறிவியலை பொது சேவை ஊடகமாக மாற்றியவர் எம்.எஸ்.சுவாமி நாதன்.
டாக்டர் சுவாமிநாதனை பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கும் அதிர்ஷ்டம் நமது அரசாங்கத்திற்குக் கிடைத்தது. இதனை எனது அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். உணவு தானியங்களில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்வதற்கான பிரசாரத்தை டாக்டர் சுவாமிநாதன் தொடங்கினார். அவரது அடையாளம் பசுமைப் புரட்சிக்கு அப்பாற்பட்டது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.