அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டு 'செபி'க்கு எதிராக புதிய வழக்கு
அதானி மீதான அமெரிக்க குற்றச்சாட்டு 'செபி'க்கு எதிராக புதிய வழக்கு
ADDED : நவ 24, 2024 11:41 PM

புதுடில்லி: தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில், 'செபி' அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதாக, உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொழிலதிபர் அதானியின் நிறுவனம் தயாரிக்கும் சூரிய மின்சாரத்தை விற்பதற்காக, பல மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
அமெரிக்க நீதித் துறை சார்பிலும், அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் சார்பிலும் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதானியின் நிறுவனத்தில், அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் முதலீடு செய்துள்ளனர்.
லஞ்சம் கொடுத்தது தொடர்பான தகவல்களை மறைத்ததாக, அதானி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடக்கும் விசாரணை தொடர்பான தகவல்களை இந்திய பங்குச் சந்தையிடம் மறைத்ததாக, அதானி உள்ளிட்டோர் மீது, செபி எனப்படும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பு தனியாக விசாரிக்கிறது.
அதானி நிறுவனம், பங்குச் சந்தை மோசடிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு அமைப்பு கடந்த ஆண்டு ஆய்வறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக, செபி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக செபி விசாரித்து வருகிறது.
இந்தாண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காலக்கெடு விதித்தும், விசாரணை தொடர்பான அறிக்கையை, செபி இதுவரை தாக்கல் செய்யவில்லை.இந்நிலையில், அதானி குழுமம் தொடர்பாக, அமெரிக்காவில் புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
விசாரணை
ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணை அறிக்கையை, செபி தாக்கல் செய்யாத நிலையில், இந்த புதிய மோசடி தொடர்பாகவும் அது விசாரிக்க உள்ளது.
இந்த விஷயத்தில் செபி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுகிறது.
ஹிண்டர்பர்க் தொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடுவதுடன், அதானி குழுமம் மீது அமெரிக்காவில் உள்ள வழக்கு தொடர்பாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.