பஹல்காமில் தாக்குதல் நடத்திய டி.ஆர்.எப்., பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா: மத்திய அரசு வரவேற்பு
பஹல்காமில் தாக்குதல் நடத்திய டி.ஆர்.எப்., பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா: மத்திய அரசு வரவேற்பு
UPDATED : ஜூலை 19, 2025 11:06 AM
ADDED : ஜூலை 19, 2025 02:06 AM

வாஷிங்டன்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட்' அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்தது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், 26 பேர் கொல்லப்பட்டனர்-. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட்' இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட்' அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட்' பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, உலகளாவிய பயங்கரவாத இயக்க பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
ஐ.நா.,வால் பயங்கரவாத குழுவாக அறிவிக்கப்பட்ட பாக்.,கை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பாவின் முன்னணி அமைப்பாக இது இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்பை வரவேற்று நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்திலும், அதை அகற்றுவதிலும் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், இந்தியா - அமெரிக்கா இடையிலான ஆழமான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் விதமாக, டி.ஆர்.எப்., குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
பயங்கரவாத அமைப்புகளும், அவற்றின் பிரதிநிதிகளும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய சர்வதேச நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி.ஆர்.எப்., பயங்கரவாத குழுவை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையை பாராட்டுகிறோம். இது, இந்தியா- - அமெரிக்கா இடையிலான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பின் வலுவான உறுதிப்பாடு. பயங்கரவாதத்திற்கு எந்த சகிப்புத்தன்மையும் இல்லை.
-ஜெய்சங்கர்
வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,

