ADDED : செப் 16, 2026 07:34 PM
வாஷிங்டன்: எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதாக அமெரிக்கா முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
‘விண்வெளியை அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என, 1967ல், சர்வதேச ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ‘ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்’ என, அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க விமானப்படை செயலர் டிராய் மெய்ன்க் கூறுகையில், “எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து ராணுவப் படைகளை பாதுகாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை, விண்வெளியில் அமெரிக்கா நிலைநிறுத்தி உள்ளது. தற்போதுள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார் நிலையை அதிகரித்து வருகிறோம்,” என்றார். எந்த வகையான ஆயுதங்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த விபரங்களை அவர் வெளியிடவில்லை.
அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விண்வெளிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. டிரம்ப் தன் முதல் பதவிக்காலத்தில், 2019ல், விண்வெளி படையை தனி ராணுவ பிரிவாக உருவாக்கினார். தற்போது, ‘கோல்டன் டோம்’ என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.
