எச்1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்ற அமெரிக்க நிறுவனங்கள் பரிசீலனை
எச்1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்ற அமெரிக்க நிறுவனங்கள் பரிசீலனை
ADDED : செப் 30, 2025 09:03 PM

புதுடில்லி: எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலியால், சர்வதேச திறன் மையங்கள் அதிகம் உள்ள இந்தியாவுக்கு, பல முக்கிய பணிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் அங்கு தங்கி வேலை செய்வதாக எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.4 லட்சம் வரை வசூலிக்கப்பட்ட நிலையில், இதனை ரூ.88 லட்சம் ஆக அதிகரித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாவை இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம் பயன்படுத்தி வந்தனர்.
இது அமெரிக்க நிறுவனங்களுக்கும் சில சிக்கல்களை ஏற்படுத்தியது. விசா நடைமுறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பல கட்டுப்பாடுகள் ஆகியனவற்றால், பணியாளர்கள் தொடர்பான நடைமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து, அந்த நிறுவனங்கள் பல பணிகளை , சர்வதேச திறன் மையங்கள் (ஜிசிசி)அதிகம் அமைந்துள்ள இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.
தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவில், 1,700 ஜிசிசிக்கள் அல்லது உலகளில் மொத்த ஜிசிசிக்களில் பாதி அளவுக்கு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனால், சர்வதேச திறன்கள் கொண்ட தொழிலாளர்களின் மையமாக இந்தியா விளங்கி வருகிறது. இதனால், விசா கட்டுப்பாடுகள் நீங்காத பட்சத்தில், ஏஐ, சைபர் செக்யூரிட்டி, பகுப்பாய்வு மற்றும் ( Product Development) உள்ளிட்ட பணிகளை இந்தியாவில் திறன் மேம்பாட்டு மையங்களுக்கு மாற்றுவது என அமெரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க அரசு வெளியிட்ட தரவுகளின்படி, அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள், மற்றும் கூகுள் , வால்ஸ்டரீட் வங்கி, ஜேபிமோர்கன் சேஸ் மற்றும் வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் எச்1பி விசாவை அதிகளவில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.