விசா விதிகளை மீறினால் நாடு கடத்தல்; இந்தியர்களுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
விசா விதிகளை மீறினால் நாடு கடத்தல்; இந்தியர்களுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
ADDED : ஆக 05, 2025 01:42 PM

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து வந்தவர்கள் விசா விதிகளை மீறினால் நாடு கடத்தலுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடூதல் வரி விதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதை ஏற்க மறுத்து இந்தியா பதிலடி கொடுத்தது.
வரி விதிப்பு விகிதத்தில் இருநாடுகள் இடையேயான கருத்து முரண் எழுந்து வரும் சூழலில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
உங்கள் அமெரிக்க விசாவின் விதிமுறைகளையும், இங்கு தங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட காலத்தையும் மதிக்க வேண்டும். சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு பிறகு (மின்னணு படிவம் I-94ல் குறிப்பிட்டுள்ள படி) அமெரிக்காவில் தங்குவது விசா ரத்து, நாடு கடத்தப்படுவதற்கு வாய்ப்பு, எதிர்காலத்தில் அளிக்கப்படும் விசாக்களுக்கு தகுதியற்ற தன்மை போன்ற கடுமையான விளைவுகளுக்கு வழி வகுக்கும்.
அமெரிக்காவில் பயணம் செய்ய, படிக்க அல்லது பணி செய்ய இங்கு அதிக காலம் தங்குவது உங்கள் திறமையை நிரந்தரமாக பாதிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மின்னணு படிவம் I-94
அமெரிக்காவில் வெளிநாட்டினரின் நுழைவை கண்காணிக்கவும், அவர்கள் வெளியேறி விட்டனரா என்பதை கண்டறியவும் மின்னணு படிவம் I-94 அந்நாட்டு பாதுகாப்புத்துறையால் வழங்கப்படுகிறது. இந்த படிவத்தில் ஒரு வெளிநாட்டினர் அமெரிக்காவில் எவ்வளவு நாட்கள் வரை தங்க சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் இடம்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

