அமெரிக்க அழுத்தத்துக்கு அடி பணியாத இந்தியா: முன்னாள் அதிகாரி
அமெரிக்க அழுத்தத்துக்கு அடி பணியாத இந்தியா: முன்னாள் அதிகாரி
ADDED : ஆக 31, 2025 09:14 PM

புதுடில்லி: '' அமெரிக்கா அனைத்து வகைகளிலும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இந்தியா எதற்கும் அடி பணியாமல், பிராந்திய தன்னாட்சி என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது ,'' என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் விகாஸ்ஸ்வரூப் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அதிபர் டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரோ கூறுகையில், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியாவை தண்டிக்கும் நோக்கிலேயே, 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா அதை நிறுத்தினால் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பு குறைக்கப்பட்டு, 25 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும்.
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான போரில், ரஷ்யாவுக்கு மறைமுக உதவி கிடைக்கிறது.
அந்த நிதி ஆதாரத்தை கொண்டுதான் ரஷ்யா தன் படை பலத்தை உறுதி செய்வதுடன், உக்ரைன் மீதான தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது- எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு, தற்போதைய நிலையில் சரியானதாக இல்லை. பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்ப்புக்கும் சமூக உறவு கொண்டுள்ளார் என நாம் நினைத்து கொண்டு உள்ளோம். பிரதமர் மோடியை, டிரம்ப்பும் மதிக்கிறார். இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவாகும் என நினைத்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
இந்தியா மீது அனைத்து வகைகளிலும் அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். ஆனால், பெருமை மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது. பிராந்திய தன்னாட்சி என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது. யாரின் உத்தரவுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் தீர்வை எட்டுவதற்கு இன்னும் நேரம் உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தால் தற்போதைய சூழ்நிலை பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவாது. இவ்வாறு அவர் கூறினார்.