சாலை கட்டுமானத்துக்கு திடக்கழிவுகள் பயன்பாடு: கட்கரி தகவல்
சாலை கட்டுமானத்துக்கு திடக்கழிவுகள் பயன்பாடு: கட்கரி தகவல்
ADDED : அக் 09, 2025 09:01 PM

புதுடில்லி: 2027-ம் ஆண்டுக்குள் திடக்கழிவுகளை சாலை கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் பணி தொடங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டில்லியில் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: எந்தப் பொருளும் வீணாகக்கூடாது. எந்த நபரும் வீண் போகக்கூடாது. நவீன தொழில்நுட்பம் மற்றும் தலைமைப்பண்பின் கொள்கையைப் பயன்படுத்தி, கழிவுகளை செல்வமாக மாற்றலாம். 2027 ம் ஆண்டு இறுதிக்குள், எந்தக் கழிவாக இருந்தாலும், அது திடக்கழிவாக இருந்தாலும் அதனை சாலை அமைக்க பயன்படுத்த போகிறோம்.
டில்லியில் மலை போல் அத்தகைய கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பார்ப்பதற்கு அழகாக இல்லை. 80 லட்சம் டன் கழிவைப் பிரித்து அதனை சாலை கட்டுமானத்துக்குப் பயன்படுத்தி இருக்கிறோம்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது முக்கியமாகும். 2014-ல் உலகில் 7வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழில்துறை நாடாக இந்தியா இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜப்பானை முந்தி 3வது பெரிய நாடாக உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழில்துறை கொண்ட நாடாக இருப்போம்.
தற்போது, எரிபொருளுக்கு மாற்றாக பயோ எரிபொருள், மின்சார வாகனங்கள், எத்தனால், மெத்தனால், பயோ டீசல், எல்என்ஜி மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மூலம் வழியைக் கண்டுபிடித்து வருகிறோம். உலகில் உள்ள அனைத்து பிராண்ட் ஆட்டோமொபைல் மையமாக இந்தியா மாறும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.