இந்த பேச்சு வேண்டாம் ராகுல்! வார்த்தை ரொம்ப கவனம்! வார்னிங் தந்த மத்திய அமைச்சர்
இந்த பேச்சு வேண்டாம் ராகுல்! வார்த்தை ரொம்ப கவனம்! வார்னிங் தந்த மத்திய அமைச்சர்
ADDED : செப் 10, 2024 07:44 AM

புதுடில்லி; எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எச்சரித்துள்ளார்.
பயம் போய்விட்டது
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாசில் அவர் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ராகுல், அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலை ஏற்க போவதில்லை என்றார். தேர்தல் முடிவுக்கு பின்னர் மத்திய அரசு மற்றும் பா.ஜ.,மீதான பயம் மக்களிடம் இருந்து போய்விட்டது என்றும் பேசினார்.
கண்டனம்
ராகுல் இந்த பேச்சு ஊடகங்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடும் கருத்துகளை முன் வைத்துள்ளார்.
வார்த்தைகளில் கவனம்
அவர் கூறி உள்ளதாவது; ராகுல் தற்போது வெளிநாட்டு பயணத்தில் இருக்கிறார். தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் தமது பாரத் ஜோடோ யாத்திரை பற்றி பேசுகிறார், மறுபக்கம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை விமர்சிக்கிறார். இது மிகவும் அபத்தமாக இருக்கிறது. சீனாவுடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். தமது வார்த்தைகளை ராகுல் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஜனநாயகம்
முன்னதாக ராகுலின் அமெரிக்க பேச்சுக்கு அசாம் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா கண்டனம் தெரிவித்து இருந்தார். சீனாவை எப்போதும் உயர்த்தி பேசுகிறார், ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

