எஸ்.பி.ஐ.,யை கேடயமாக பயன்படுத்துவதா? பா.ஜ., மீது கார்கே குற்றச்சாட்டு
எஸ்.பி.ஐ.,யை கேடயமாக பயன்படுத்துவதா? பா.ஜ., மீது கார்கே குற்றச்சாட்டு
ADDED : மார் 06, 2024 04:54 AM

புதுடில்லி : ''தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ.,யை, மத்திய பா.ஜ., அரசு கேடயமாக பயன்படுத்தி வருகிறது,'' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசால், 2018ல் அமல்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, பிப்., 15ல் ரத்து செய்தது.
நன்கொடை
மேலும், மார்ச் 6ம் தேதிக்குள், இத்திட்டத்தின் வாயிலாக அரசியல் கட்சிகள் பெற்ற பணம் குறித்த விபரங்கள் மற்றும் நன்கொடை அளித்தோரின் பெயர்களை வெளியிடும்படி, எஸ்.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கில் விபரங்களை வெளியிட, ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், எஸ்.பி.ஐ., நேற்று மனு தாக்கல் செய்தது. இது குறித்து, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கூறியதாவது:
தேர்தல் பத்திரங்கள் திட்டத்துக்கு துவக்கத்தில் இருந்தே, காங்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக நடந்த சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக, நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ.,யை, மோடி அரசு கேடயமாக பயன்படுத்துகிறது.
உச்ச நீதிமன்றம் கேட்ட தகவல்கள், ஜூன் 30-க்கு பின் வெளியிடப்படுவதையே, பா.ஜ., விரும்புகிறது. தற்போதுள்ள லோக்சபாவின் பதவிக்காலம், ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30- வரை, எஸ்.பி.ஐ., அவகாசம் கேட்டுள்ளது.
நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை, 24 மணி நேரத்துக்குள் பொருத்தி பார்க்க முடியும் என, நிபுணர்கள் கூறும் நிலையில், எஸ்.பி.ஐ.,க்கு கூடுதலாக நான்கு மாதங்கள் தேவைப்படுவது ஏன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அழிக்க, எஸ்.பி.ஐ.,யை, பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பத்திரங்கள்
சமூக வலைதளத்தில், காங்., - எம்.பி., ராகுல் வெளியிட்ட பதிவில், 'தேர்தல் பத்திரங்கள் குறித்து, நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'பின், தேர்தலுக்கு முன் இந்த விபரங்களை எஸ்.பி.ஐ., வெளியிட விரும்பாதது ஏன்?' என தெரிவித்துள்ளார்.

