உத்தர கன்னடா சுற்றுலா மேம்பாடு தமிழ் கலெக்டர் புதிய திட்டம்
உத்தர கன்னடா சுற்றுலா மேம்பாடு தமிழ் கலெக்டர் புதிய திட்டம்
ADDED : பிப் 18, 2025 05:57 AM

உத்தரகன்னடா: உத்தர கன்னடாவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு ஒரு புதிய திட்டத்தை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா கொண்டு வந்துள்ளார்.
கர்நாடகாவில் சுற்றுலாவுக்கு என பிரபலமான மாவட்டங்களில் உத்தர கன்னடாவும் ஒன்று. இந்த மாவட்டம், சுற்றுலாவை மையமாக வைத்தே இயங்குகிறது. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பயணியர், சுற்றுலா வருகின்றனர்.
மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு சில இடங்களை தவிர, பெரும்பாலான இடங்கள் பற்றி சுற்றுலா பயணியருக்கு தெரிவதில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழரான உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்திற்கு 'காணப்படாத உத்தர கன்னடா' எனும் பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெளியுலகிற்கு அதிகம் தெரியாத இடங்களை பட்டியலிட்டு, அவற்றின் சிறப்புகள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்படும். இத்தகவல்கள் கடற்கரை, கோவில், காடு, மலைகள் என தனித்தனியாக பிரிக்கப்படும். பின், புத்தகமாக வெளியிடப்படும். இத்தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் சுற்றுலாவுக்கு வருவோர், உத்தர கன்னடாவில் உள்ள பல இடங்களை பற்றி அறிய முடியும்.
இத்திட்டத்தால், சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு உத்தர கன்னடா மக்கள் ஆதரவு தெரிவிக்குமாறும், தங்கள் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவலை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஏப்ரல் இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலெக்டரின் முயற்சிக்கு உள்ளூர்வாசிகள், கடை வியாபாரிகள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.