2 சிறுவர்கள் உயிரை குடித்த கொசுவர்த்தி! தீயில் கருகி பலியான சோகம்
2 சிறுவர்கள் உயிரை குடித்த கொசுவர்த்தி! தீயில் கருகி பலியான சோகம்
ADDED : டிச 22, 2024 05:36 PM

காசியாபாத்: கொசுவர்த்தி சுருளால் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
காசியாபாத் பிரசாந்த் விஹார் பகுதியில் வசிப்பவர் நீரஜ். இவருக்கு வன்ஷ், அருண் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் முறையே 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம் போல் அவர்கள் வீட்டில் உள்ள தங்களது அறையில் உறங்கி உள்ளனர். மற்றொரு அறையில் தந்தை நீரஜ் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்துள்ளார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் திடீரென மின்சாரம் தடைபட்டது. கொசுத் தொல்லை அதிகமானதால் அருண், வன்ஷ் இருவரும் தூக்கமின்றி அவதிப்பட்டு உள்ளனர். பின்னர் கொசுவர்த்தி ஒன்றை எடுத்த அவர்கள், அதை பற்ற வைத்து தங்களது கட்டிலுக்கு அடியில் வைத்துள்ளனர். மின்சாரம் எப்போது வரும் என்று உறுதியாகாத நிலையில் இருவரும் மீண்டும் உறங்க சென்றிருக்கின்றனர்.
சிறிதுநேரத்தில் மகன்களின் அறையில் இருந்து கரும்புகையின் நெடி வருவதை அறிந்த தந்தை நீரஜ், பதறியடித்தபடி சென்றுள்ளார். ஆனால் அதற்குள் மகன்களின் அறை தீப்பற்றி எரிய என்ன செய்வது என்று தெரியாமல் பதறி உள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து நீரஜ் உள்ளே சென்றிருக்கிறார்.
வன்ஷ் சம்பவ இடத்தில் பலியாகி கிடக்க, மற்றொரு மகன் அருணை மீட்ட நீரஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் கொசுவர்த்தியால் தீ விபத்து ஏற்பட்டு இருந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் முழுமையான பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மை என்ன என்பது தெரியவரும் என்று போலீசார் கூறி உள்ளனர். கொசுவர்த்தி 2 சிறுவர்களின் உயிரை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.