உத்தர கன்னடா வேட்பாளர்: காங்.,கில் 5 பேர் பட்டியல்
உத்தர கன்னடா வேட்பாளர்: காங்.,கில் 5 பேர் பட்டியல்
ADDED : பிப் 20, 2024 06:38 AM

உத்தர கன்னடா: ''உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில் வெற்றி பெறும் வாய்ப்புள்ள ஐந்து பேரின் பெயர்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது,'' என சட்ட துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடகத்தின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவில் வெற்றி பெற காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வகிறது. கடந்த முறை ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை 20 தொகுதிகளையாவது கைப்பற்றுவது என்று முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் பணி வழங்கப்பட்டு உள்ளதால், தேர்தல் வியூகத்தை செயல்படுத்த, தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பாக, உத்தர கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சரான எச்.கே.பாட்டீல் சிர்சியில் நேற்று அளித்த பேட்டி:
உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள ஐந்து காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் யார் வெற்றி பெறுவர் என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். மாவட்டத்தில் வேட்பாளர் தேர்வின் போது எம்.எல்.ஏ.,க்களிடம் பேசப்பட்டது. அவர்களது கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்.
மதத்தின் அடிப்படையில் பா.ஜ., அரசியல் செய்து வருகிறது. இதில், மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்து உள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சாத்தியமில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.

