ADDED : ஜன 27, 2024 11:03 PM
இன்றைய காலகட்டத்தை, பிளாஸ்டிக் ஆக்கிரமித்த பின், பழைமையான பொருட்கள் மாயமாகின்றன. ஆனால், சில பொருட்களுக்கு விதிவிலக்கு. இவற்றில் ஈச்சம் பாயும் ஒன்றாகும். இது பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது என்றால் மிகையில்லை.
ஈச்சமரம் பல விதங்களில் பயன்படுகிறது. இதன் உலர்ந்த இலைகளை வைத்து பாய், கூடைகள், தட்டுகள் வீட்டு அலங்கார பொருட்கள் உட்பட, விதவிதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உத்தரகன்னட மாவட்டம், ஈச்சம் பாய்களுக்கு பிரசித்தி பெற்றது.
கோடை காலம், குளிர்க்காலம் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் ஈச்சம் பாய்கள் பொருத்தமானவை. ஒரு காலத்தில், அனைவரின் வீடுகளிலும் ஈச்சம் பாய்கள் இருந்தன. ஆனால், தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
உத்தரகன்னடா, ஜோயிடாவில் ஈச்சமரப் பாய்கள் மிகவும் பிரபலமானவை. ஈச்சம்பழ சீசன் முடிந்தபின், மரத்தின் சருகுகளை சேகரித்து உலர்த்துகின்றனர்.
உலர்ந்த பின் தண்ணீரில் நனைத்து பிரித்து, பாய் பின்னுகின்றனர். இதில் பின்னுவதற்கு கயிறோ அல்லது பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. ஈச்ச மரத்தின் சருகுகள், இதன் புல்லை வைத்தே பாய் பின்னுகின்றனர்.
ஜோயிடாவின் பல வீடுகளில், ஈச்சம் பாய் தயாரிப்பது தொழிலாகவே உள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு இதன் மூலம் வருவாய் கிடைக்கிறது.
ஒரு பாயின் விலை 500 ரூபாய் வரை விற்கின்றனர். கலை நயத்துடன் பாய் பின்னுகின்றனர். சுகமான உறக்கத்தை விரும்புவோர், ஈச்சம் பாயை பயன்படுத்தலாம்.
- நமது நிருபர் -