கேதார்நாத்தில் நிலச்சரிவு: யாத்ரீகர்கள் 5 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
கேதார்நாத்தில் நிலச்சரிவு: யாத்ரீகர்கள் 5 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
UPDATED : செப் 10, 2024 03:13 PM
ADDED : செப் 10, 2024 01:30 PM

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், யாத்ரீகர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமுற்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம், கேதார்நாத் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி, யாத்ரீகர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடலையும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரமாக போராடி மீட்டனர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என ருத்ரபிரயாக் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மீட்பு பணிகள்
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மீட்பு படை அதிகாரி ஒருவர், 'தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அவ்வழியாகச் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்' என்றார். சில தினங்களாக கனமழை கொட்டுவதே நிலச்சரிவுக்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.