பொது சிவில் சட்டத்தின் கீழ் திருமணம் கட்டாய பதிவு! உத்தரகண்ட் அதிரடி
பொது சிவில் சட்டத்தின் கீழ் திருமணம் கட்டாய பதிவு! உத்தரகண்ட் அதிரடி
UPDATED : பிப் 25, 2025 11:34 AM
ADDED : பிப் 25, 2025 07:11 AM

டேராடூன்; அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் திருமணத்தை பொது சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகண்ட் அறிவித்துள்ளது.
உத்தரகண்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் அமலாகி இருக்கிறது. இந்த புதிய சட்டம், மாநிலத்தில் உள்ள அனைத்து சாதி, மதம், பாலினம் ஆகியவற்றுக்கு பொருந்தும். மேலும், திருமணம், வாரிசு உரிமை, விவாகரத்து, திருமணம் செய்து கொள்ளாமல் தம்பதி போல வாழ்வது ஆகியவற்றை மட்டுமே இச்சட்டம் குறிப்பிடுகிறது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் திருமணத்தை பொது சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும், இது கட்டாயம் என்று உத்தரகண்ட் அறிவித்துள்ளது. மார்ச் 26ம் தேதி, 2010ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற திருமணங்களை பதிவு செய்யுமாறு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த பதிவுகள் மீதான நம்பகத்தன்மை குறித்து உரிய முறையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நெறிப்படுத்த வேண்டும். அது தொடர்பான அறிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரகண்ட் அரசு கூறி உள்ளது.
எவ்வித தாமதமும் இன்றி திருமண பதிவுகள் ஆவணப்படுத்தும் வகையில், தொழில் நுட்ப உதவிகளை செய்து தருமாறு உத்தரகண்ட் மாநில தகவல் தொழில் நுட்பத்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.