sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தரகண்ட் அரசு கொண்டு வருகிறது பொது சிவில் சட்டம்!

/

உத்தரகண்ட் அரசு கொண்டு வருகிறது பொது சிவில் சட்டம்!

உத்தரகண்ட் அரசு கொண்டு வருகிறது பொது சிவில் சட்டம்!

உத்தரகண்ட் அரசு கொண்டு வருகிறது பொது சிவில் சட்டம்!


UPDATED : பிப் 07, 2024 07:37 AM

ADDED : பிப் 06, 2024 11:40 PM

Google News

UPDATED : பிப் 07, 2024 07:37 AM ADDED : பிப் 06, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன் : சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை உத்தரகண்ட் மாநில அரசு கொண்டு வருகிறது. இதற்கான மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று, யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம். திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்துகளில் பங்கு உள்ளிட்டவற்றில், ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன.

வாக்குறுதி


அனைத்து மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அக்கட்சி ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தில் அதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கும் ஒரே மாநிலம் கோவா. கோவாவை போர்ச்சுகீசியர் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் 1867ம் ஆண்டில் அங்கே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த, 1961ல் தான் இந்தியாவின் ஒரு மாநிலமாக கோவா இணைந்தது. அங்கு வாழும் அனைத்து மதத்தினரும் பொது சிவில் சட்டத்தை பின்பற்றுகின்றனர். எந்த பிரச்னையும் எழவில்லை.

உத்தரகண்டில் நடந்த 2022 சட்டசபை தேர்தலின்போது, பொது சிவில் சட்டம் இயற்றி அமல்படுத்துவோம் என்பதே, பா.ஜ.,வின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அதற்கு மக்கள் ஆதரவு கிடைத்ததால், மிகப் பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது பா.ஜ., புஷ்கர் சிங் தாமி முதல்வர் ஆனார். பதவி ஏற்றதும், ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை அவர் அமைத்தார்.

பரிந்துரை


அந்த குழு அளித்த வரைவு பரிந்துரைகளின் அடிப்படையில், பொது சிவில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. அதை சட்டமாக நிறைவேற்றுவதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டது. நேற்று சட்டசபை கூடியதும், நாட்டின்அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஒரு கையிலும், மசோதாவை மற்றொரு கையிலும் ஏந்தியபடி அவர் சபைக்குள் நுழைந்தார். அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் கோஷங்களையும் எழுப்பினர்.

மொத்தம், 392 பிரிவுகள் உள்ள, 172 பக்க மசோதாவை படித்து பார்த்து விவாதத்தில் பங்கேற்க அவகாசம் தேவை என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு சபாநாயகர் ரீது கந்துாரி அனுமதி அளித்தார். இந்த வாரமே மசோதா நிறைவேற்றப்பட்டு, உடனடியாக கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் அமலுக்கு வரும் என அதிகாரிகள் கூறினர்.

உத்தராகண்டை பின்பற்றி பா.ஜ., ஆட்சி நடக்கும் மற்ற மாநிலங்களும் பொது சிவில் சட்டம் இயற்றும் என தெரிகிறது. லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த சட்டம் நாடு முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்



* திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்து பங்கீடில் அனைத்து மதத்தினருக்கும் இந்த சட்டமே பொருந்தும்

* பட்டியலின பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு

* ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை எவரும் திருமணம் செய்ய முடியாது. அதாவது, திருமணத்தின்போது ஒருவருக்கு கணவனோ, மனைவியோ இருக்கக் கூடாது

* திருமண வயது பெண்ணுக்கு 18, ஆணுக்கு 21 ஆகும்

* தாய், தந்தை, தாத்தா, பாட்டி வழியில் நேரடி உறவு உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளவும், விதவையான மருமகளை மாமனார் திருமணம் செய்யவும் ஏற்கனவே உள்ள தடை நீடிக்கும்

* 'ஹலாலா' முறை தடை செய்யப்படுகிறது. கணவனிடம் விவாகரத்து பெற்ற பெண் மீண்டும் அவரையே திருமணம் செய்ய விரும்பினால், வேறொரு நபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றாக வேண்டும் என்பதே ஹலாலா முறை. புது சட்டப்படி, விவாகரத்து பெற்ற பெண், அதே நபரை மீண்டும் திருமணம் செய்ய தடை இல்லை

* அவரவர் மத சம்பிரதாயத்துக்கு ஏற்ப திருமணம் செய்யலாம். ஆனால், 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாவிட்டால், 10,000 ரூபாய் அபராதம். தவறான தகவல் தெரிவித்தால் மூன்று மாதம் சிறை, 25,000 ரூபாய் அபராதம் உண்டு

* கோர்ட்டுக்கு போகாமல் எந்த திருமண உறவையும் முறிக்க முடியாது. வேறு வழியில் விவாகரத்து செய்தால், மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை

* பொது சிவில் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்தால் ஆறு மாதம் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்

* திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் 'லிவ்-இன்' முறை அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் திருமண தம்பதியர் போல, தங்கள் வாழ்க்கை ஏற்பாட்டை பதிவு செய்ய வேண்டும்

* லிவ்-இன் முறையில், 18 வயதுக்கு குறைந்தவர்கள் பதிவு செய்ய முடியாது. 21 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்றால் அவர்களுடைய பெற்றோருக்கு பதிவாளர் தகவல் தெரிவிக்க வேண்டும்

* திருமணம் செய்யாமலே வாழும் ஜோடிக்கு பிறக்கும் குழந்தை, சட்டப்பூர்வமான குழந்தையாக கருதப்படும்

* கட்டாயப்படுத்தி, மிரட்டி, வலுக்கட்டாயமாக அல்லது வேறு விதங்களில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக பெண்ணோ ஆணோ தெரிவித்தால், அவர்கள் சேர்ந்து வாழ்வதை பதிவு செய்ய முடியாது

* ஒரு மாதத்துக்கு மேலாக இந்த உறவு முறையில் சேர்ந்து வாழ்பவர்கள், அதை பதிவு செய்யாவிட்டால், 10,000 ரூபாய் அபராதம், ஒரு மாத சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

* பதிவின்போது தவறான தகவல் தெரிவித்தால், மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்

* ஒன்றாக வாழும் இருவருக்குமே வேறு மனைவியோ கணவனோ இருக்கக் கூடாது

* லிவ்-இன் முறையில் பதிவு செய்து வாழும் தம்பதி பிரிய நேரிட்டால், அந்த பெண் ஜீவனாம்சம் கோர முடியும்.






      Dinamalar
      Follow us