காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோவில் யாத்திரை நிறுத்தம்; நிலச்சரிவில் 5 பேர் பலி; 14 பேர் காயம்
காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோவில் யாத்திரை நிறுத்தம்; நிலச்சரிவில் 5 பேர் பலி; 14 பேர் காயம்
UPDATED : ஆக 26, 2025 08:00 PM
ADDED : ஆக 26, 2025 07:50 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்லும் பாதையில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் கத்ராவுக்கு அருகிலுள்ள திரிகுடா மலைகளில் வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் பாரம்பரியமாக கத்ராவிலிருந்து 13 கி.மீ நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த சூழலில், கனமழை காரணமாக வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பாரம்பரியாக பக்தர்கள் செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. இதற்கிடையே, கோவிலுக்குச் செல்லும் பாதையில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய பக்தர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல், தோடா மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் அபாய எல்லையைத் தாண்டி செல்வதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால்4 பேர் உயிரிழந்தனர். ஜம்முவின் பகவதி நகரில் உள்ள பாலம் சேதம் அடைந்தது. இதில் சிக்கி உள்ள கார்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மொபைல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.
களத்தில் ராணுவம்
ஜம்முவில் பலத்த மழை பெய்ததால், இந்திய ராணுவம் களமிறங்கி காடிகர் பகுதியில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.
எச்சரிக்கை
இதற்கிடையில், கதுவா, சம்பா, தோடா, ஜம்மு, ரம்பன் மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.