வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார்; துணை ஜனாதிபதி சி.பி.ஆர் பெருமிதம்
வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார்; துணை ஜனாதிபதி சி.பி.ஆர் பெருமிதம்
ADDED : டிச 21, 2025 10:49 PM

போபால்: ஜனநாயகத்தின் மீதான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், இந்தூரில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் வாஜ்பாய். அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு அசாதாரணமானவர். தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார்.
வாஜ்பாயின் வாழ்க்கை, தலைமை என்பது வெறும் அதிகாரத்தைப் பற்றியது மட்டுமல்ல. சேவை, பொறுப்பு மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பைப் பற்றியது என்பதை தேசத்திற்கு நினைவூட்டுகிறது.
அரசியல்வாதி, நிர்வாகி, பார்லிமென்ட் உறுப்பினர், கவிஞர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சிறந்த மனிதர் என அவரது முன்மாதிரியான செயல்களுக்காக நினைவுகூரப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக மேம்பாட்டுத் திட்டங்கள் தென் மாநிலத்தை கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

