ADDED : அக் 18, 2024 07:36 AM

பெங்களூரு: 'வால்மீகி சமுதாயத்தின் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட நாகேந்திராவை, முதல்வர் சித்தராமையா கட்டிப்பிடித்து அன்பு காட்டியது சரியா' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுனில்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் கோடிக்கணக்கான ரூபாயை, நாகேந்திரா விழுங்கி ஏப்பம் விட்டார். இப்படிப்பட்டவரை முதல்வர் சித்தராமையா, அன்புடன் கட்டி அணைத்து பாராட்டியது சரியா.
மஹாராஷ்டிரா தேர்தல் நேரத்தில், எந்த ஆணையத்தில் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என, நாகேந்திராவுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினாரா. அனைத்து முறைகேடுகளும், மக்களின் கண் முன்னால் நடந்தவை.
ஊழல் செய்து சிறைக்கு சென்று வந்த நபருக்கு, முதல்வரின் இல்லத்தில் விஜயோத்சவா நடத்தி கவுரவிக்கப்படுகிறார் என்றால், என்ன அர்த்தம்.
இவரது ஊழலுக்கு முதல்வர் துாண்டுதல் உள்ளதா. ஆந்திரா தேர்தலுக்கு நாகேந்திரா எத்தனை கோடிகளை, பரிமாற்றம் செய்தார். சட்டசபையில், முதல்வர் உரையாற்றும் போது வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டது பொய்யா.
முறைகேடு தொடர்பாக, அன்றைய அமைச்சர் நாகேந்திராவிடம் ராஜினாமா கடிதம் பெற்றது பொய்யா. சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையினர், இவரை கைது செய்தது பொய்யா.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.