மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு தீபாவளி பரிசு; அகவிலைப்படி 3% உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு தீபாவளி பரிசு; அகவிலைப்படி 3% உயர்வு
UPDATED : அக் 16, 2024 03:38 PM
ADDED : அக் 16, 2024 03:32 PM

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு, பணவீக்கத்தைப் பொருத்து ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்து. இதன்மூலம் 50 சதவீதமாக இருந்த மொத்த அகவிலைப்படி, 53 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 1.15 கோடிக்கும் அதிகமானோர் பலனடைய உள்ளனர்.