வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்!
வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்!
ADDED : செப் 28, 2024 02:28 PM

புதுடில்லி: வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் கனடா, சிலி, மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
மத்திய அரசு பெரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறது. நாட்டிலேயே அதிவேகமாக பயணிக்கும் ரயில் என்ற பெருமை இதற்கு உண்டு. மற்ற ரயில்களை காட்டிலும் இதற்கு கட்டணம் அதிகம் என்றாலும், செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும் என்பதால், இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய மக்களிடம் மட்டுமல்லாமல் சிலி, கனடா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளும் இந்த ரயில் மீது ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இதுபோன்ற ரயில்களை தயாரிக்க வெளிநாடுகளில் 160 முதல் 180 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆனால், இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் 120 முதல் 130 கோடி ரூபாய் தான் செலாவாகிறது.
வேகதகத்தை அதிகரிப்பதிலும் வந்தே பாரத் ரயில்கள் முன்னணியில் உள்ளது. புல்லட் ரயில் கிளம்பிய 54 நொடிகளில் தான் மணிக்கு 100 கி.மீ., வேகத்தை எட்டும். ஆனால், வந்தே பாரத் ரயில்கள் 52 வினாடிகளில் இந்த தூரத்தை எட்டுகிறது.
வடிவமைப்பிலும் வெளிநாட்டு ரயில்களை விட சிறப்பானதாகவும் உள்ளது. விமானங்களில் இருந்து வரும் சத்தத்தை விட வந்தே பாரத் ரயில்களில் இருந்து வரும் சத்தம் 100 மடங்கு குறைவு. எரிபொருள் நுகர்வும் குறைவு. இதற்காக இந்திய ரயில்வே கட்டமைப்பை அதிகரித்து வருவதுடன், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.