படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்: இத்தனை வசதிகளா? மத்திய அமைச்சரின் வீடியோ வைரல்
படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்: இத்தனை வசதிகளா? மத்திய அமைச்சரின் வீடியோ வைரல்
UPDATED : செப் 01, 2024 05:10 PM
ADDED : செப் 01, 2024 04:48 PM

புதுடில்லி: வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில்
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதி நவீன சொகுசு வசதி கொண்ட இந்த ரயில்கள் ஏசி வசதி, பயோ டாய்லட், தானியங்கி கதவு என பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. பயணிகள் மத்தியில் வரவேற்பு கொண்ட இந்த ரயில்கள் இருக்கை வசதி மட்டுமே உள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நேற்று நடந்த ரயில் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசும் போது படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் இயக்கப்படும் எனக்கூறியிருந்தார்.
3 மாதங்களில்
இந்த ரயில் பெட்டிகள் பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இதன் பணிகள் முடிவடைந்துவிட்டன. பல்வேறு சோதனைக்கு பிறகு 2 அல்லது 3 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ
இந்த பெட்டிகளை ஆய்வு செய்த அஸ்வினி வைஷ்ணவ், அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளை அறிமுகம் செய்ததுடன், அதை உருவாக்கிய மற்றும் வடிவமைத்த ஊழியர்களுடன் கலந்துரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அமரும் வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் உள்ள வித்தியாசம் குறித்து விளக்கி உள்ளார்.
நடுத்தர வகுப்பினருக்காக
இது தொடர்பாக அவர் கூறுகையில், வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இது நடுத்தர வகுப்பினருக்கான ரயிலாக இருக்கும். ராஜ்தானி ரயில் கட்டணத்திற்கு இணையாக இருக்கக்கூடும். வசதியான மற்றும் மலிவான கட்டணத்தை கொண்ட அனுபவத்தை வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வசதிகள் என்னென்ன
*800 முதல் 1,200 கி.மீ., தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
*16 பெட்டிகள் இருக்கும். அதில் ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகள்,
*இரண்டு அடுக்கு படுக்கை வசதிகொண்ட நான்கு பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டி 1 உடன் 823 பேர் பயணிக்க முடியும்.
*மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.
*மொபைல் போன் சார்ஜிங் வசதி, பாதுகாப்புக்காக கேமரா, பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஆகியவை இடம்பெறும்.
*முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிகள் சுடு தண்ணீரில் குளிக்கும் வசதி உள்ளது.