பெங்களூரு - ஷிவமொகா இடையே 3 மாதங்களில் 'வந்தே பாரத்' ரயில்
பெங்களூரு - ஷிவமொகா இடையே 3 மாதங்களில் 'வந்தே பாரத்' ரயில்
ADDED : செப் 27, 2024 08:16 AM

ஷிவமொகா: ''பெங்களூரு - ஷிவமொகா வந்தே பாரத் ரயில், மூன்று மாதங்களில் இயங்கும்,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறினார்.
ஷிவமொகா மாவட்டத்தில் நடக்கும் ரயில்வே பணிகள் குறித்து, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, ஷிவமொகாவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஷிவமொகா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா, எம்.எல்.ஏ.,க்கள் சன்னபசப்பா, சாரதா நாயக், எம்.எல்.சி.,க்கள் அருண், பாரதி ஷெட்டி, பல்கிஸ் பானு, தனஞ்ஜெய் சார்ஜி, தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் அரவிந்த் ஸ்ரீவத்சவா, மைசூரு மண்டல ரயில்வே மேலாளர் ஷில்பா அகர்வால், ஷிவமொகா கலெக்டர் குருதத் ஹெக்டே கலந்து கொண்டனர்.
ரூ.385 கோடி
கூட்டத்தில் சோமண்ணா பேசியதாவது:
ஷிவமொகா மாவட்டத்திற்கு ரயில்வே துறை பங்களிப்பு அதிகமாக உள்ளது. மைசூரு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்கள் 385 கோடி ரூபாய் செலவில், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். ஷிவமொகாவில் இருந்து ஷிகாரிபுரா வழியாக ராணிபென்னுார் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
பிரூரில் இருந்து ஷிவமொகாவிற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும். ஷிவமொகாவில் உள்ள ரயில்வே கூட்ஸ் ஷெட் தரம் உயர்த்தப்படும். ரயில்வே துறையில் நடக்கும் மோசமான பணிகளை பொறுத்து கொள்ள முடியாது. ரயில்வே, பாதுகாப்பு துறை போன்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள், 'பெங்களூரு - ஷிவமொகா இடையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்' என்று, கோரிக்கை வைத்தனர். அதற்கு, 'இன்னும் மூன்று மாதங்களில், பெங்களூரு - ஷிவமொகா வந்தே பாரத் ரயில் இயங்கும்' என்றார்.
நீட்டிப்பு
தென்மேற்கு ரயில்வே அறிக்கை:
கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து பெங்களூரு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையத்திற்கு, செவ்வாய்க்கிழமை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், இந்த மாதம் 24ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 5 வரை, செவ்வாய்கிழமை தோறும் ரயில் இயக்கப்படுகிறது.
சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து கொச்சுவேலி வரை அக்டோபர் 2ல் இருந்து நவம்பர் 6 வரை புதன்கிழமை தோறும் ரயில் இயங்கும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டல அறிக்கை:
தீபாவளி, பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து, பெங்களூரு யஷ்வந்த்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அக்டோபர் 5ம் தேதியில் இருந்து நவம்பர் 30 வரை வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:15 மணிக்கு புறப்படும் ரயில் (02811) திங்கட்கிழமை அதிகாலை 12:15 மணிக்கு யஷ்வந்த்பூரை வந்தடையும்.
அக்டோபர் 7ல் இருந்து டிசம்பர் 2 வரை வாரந்தோறும் திங்கட்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும் ரயில் செவ்வாய் கிழமை மதியம் 12:15 மணிக்கு புவனேஸ்வர் செல்லும்.
குருதா ரோடு, பிரம்மாபூர், பாலசா, ஸ்ரீகாகுளம் ரோடு, கோட்டவலசா, துவட்டா, சாமல்கோட், ராஜமுந்திரி, விஜயவாடா, குண்டூர், நரசரோபேட், மர்காபூர் ரோடு, கிதலுார், நந்தியால், தோனி, தர்மாவரம், ஸ்ரீ சத்யசாய் பிரசாந்தி நிலையம் ஆகிய நிலையங்களில் ரயில் நிற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.