எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... வந்தே பாரத்தை 'கூட்டிட்டு' வந்தது கூட்ஸ் இன்ஜின்!
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... வந்தே பாரத்தை 'கூட்டிட்டு' வந்தது கூட்ஸ் இன்ஜின்!
UPDATED : செப் 09, 2024 05:25 PM
ADDED : செப் 09, 2024 04:32 PM

இட்டாவா: வந்தே பாரத் ரயில் திடீர் கோளாறால் நடுவழியில் நிற்க, சரக்கு ரயில் இன்ஜினை கொண்டு இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி இருக்கிறது.
புதுடில்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் டில்லியில் இருந்து ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா அருகே பரத்தானா என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென ரயிலில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, ரயிலை உடனடியாக நிறுத்திய டிரைவர்கள் இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று தெரிய வர அதை சரிசெய்ய ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
3 மணி நேரம் போராடியும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, அந்த ரயிலில் இருந்த பயணிகள் மாற்று ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சரக்கு ரயில் இன்ஜினை பயன்படுத்தி வந்தே பாரத் ரயில் இழுத்துச் செல்லப்பட்டது.
தண்டவாளத்தில் சரக்கு ரயில் என்ஜின் முன்பகுதியில் இயக்கப்பட அதன் பின்னால் வந்தே பாரத் ரயில் சென்றது. இதை அவ்வழியே செல்பவர்கள் கண்டு தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.