தாயின் மணிக்கொடி பாரீர்... பார்லியில் உணர்ச்சிப் பொங்க பாடிய பிரதமர் மோடி
தாயின் மணிக்கொடி பாரீர்... பார்லியில் உணர்ச்சிப் பொங்க பாடிய பிரதமர் மோடி
UPDATED : டிச 08, 2025 01:44 PM
ADDED : டிச 08, 2025 12:43 PM

புதுடில்லி: வந்தே மாதம் பாடலின் 150ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு பார்லியில் நடந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாடலை உணர்ச்சி பொங்க பாடிக்காட்டினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,க்கும் புகழாரம் சூட்டினார்.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து இன்று லோக்சபாவில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது; வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை. இது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். வந்தே மாதரம் விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம். ஏதுமில்லை. வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திர போராட்டத்தினால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல. சுதந்திர தாய்க்கான பாடல். அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை.
வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது. வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்க 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார். 2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாக, வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்ட போது, நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கி இருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.
இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால தலைமுறையினர் வந்தே மாதரம் குறித்து அறிந்து கொள்ள முடியும். எதிர்பார்பாராத விதமாக, வந்தே மாதரத்தின் 100ம் ஆண்டில் அவசரநிலையை சந்தித்தோம்.
மேற்கு வங்கத்தில் இருந்து ஒலித்த போர்க்குரல் தான் வந்தே மாதரம். இந்த முழக்கம் நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டி மிகப்பெரிய சுதந்திர உணர்வை தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் வஉசி வெளிப்படுத்தினார். அதேபோல, தமிழ் புலவர் சுப்ரமணிய பாரதி தமிழில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை மிரளச் செய்தார். ( பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாக பாடினார்)
1905ம் ஆண்டு காந்தி வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசினார். மேலும், வந்தே மாதரம் பாடல் நம் நாட்டின் தேசிய கீதமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், முன்னாள் பிரதமர் நேருவால் தான் வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதம் ஆகாமல் போனது. முஸ்லிம் லீக் கட்சி வந்தே மாதரம் பாடலை வெறுத்தது. ஆனால், அந்த முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் பிரதமர் நேரு ஆதரித்தார், இவ்வாறு அவர் கூறினார்.
விளக்கம்
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய்; நேருவின் பெருமைகளை உங்களால் அழிக்க முடியாது. முஸ்லீம் லீக் கட்சியினர் வந்தே மாதரத்தை புறக்கணித்தார்கள். ஆனால், காங்கிரஸ் அவர்களை பின்தொடரவில்லை, என்றார்.
புறக்கணிப்பு
ராகுல், பிரியங்கா ஆகியோர் வந்தே மாதரம் பற்றிய சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பங்கேற்கவில்லை.

