நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆத்தூர் அருகே விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது
நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆத்தூர் அருகே விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது
UPDATED : ஜூன் 26, 2025 03:55 PM
ADDED : ஜூன் 26, 2025 03:48 PM

ஆத்தூர்: தலைவாசல் அருகே நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையத்தை சேர்ந்தவர் கண்ணையன். தனது நிலத்தை அளப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த வி.ஏ.ஓ., பிரபு (30), உதவியாளர் வேல்முருகன் (44). ஆகியோர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இது குறித்து கண்ணையன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் முருகன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் கண்ணையனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ. 10,000 ரொக்கத்தை கொடுத்து அனுப்பினர்.
இதனை பிரபு மற்றும் வேல்முருகன் அவரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாகபிடித்தனர். லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பில் கலெக்டர் கைது
திருவேற்காடு நகராட்சியில் ஜெகதீஷ் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் உமாநாத் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.