'வாயு வஜ்ரா' பஸ்கள் இயக்கம் 30 நாளில் ரூ.11 கோடி வருவாய்
'வாயு வஜ்ரா' பஸ்கள் இயக்கம் 30 நாளில் ரூ.11 கோடி வருவாய்
ADDED : டிச 05, 2024 07:33 AM

பெங்களூரு: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வாயு வஜ்ரா பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை ஏறுமுகமாகிறது. இதனால் பி.எம்.டி.சி.,யின் வருவாய் அதிகரிக்கிறது. நவம்பரில் 11 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு நகரில் இருந்து தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு செல்வது, சவாலானது.
பஸ், வாடகை கார், தனியார் வாகனங்கள் என, பல்வேறு வழிகளில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
பெங்களூரு மக்களின் உயிர் நாடியான பி.எம்.டி.சி., சார்பில், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, 144 வாயு வஜ்ரா சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நகரின் 17 வழித்தடங்களில் இருந்து, வாயு வஜ்ரா 'ஏசி' பஸ்கள், விமான நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
நவம்பரில் விமான நிலையத்துக்கு, 4,07,531 பயணியர் பயணம் செய்துள்ளனர்.
முதன் முறையாக, வாயு வஜ்ரா பஸ்கள் மூலமாக, பி.எம்.டி.சி.,க்கு 11 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. குறைந்த கட்டணம், தரமான போக்குவரத்து சேவை வழங்குவதே, பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
வாடகை கேப்களில், பயண கட்டணம் மிகவும் அதிகம். அது மட்டுமின்றி கேப் டிரைவர்கள், பயணியருடன் தகராறு செய்கின்றனர்.
புதிய வழித்தடங்களில், பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.