ADDED : மே 22, 2025 09:18 PM
புதுடில்லி:“டில்லி சட்டசபையில் வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோர் படங்கள் வைக்கப்படும்,”என, சபாநாயகர் விஜேந்தர் குப்தா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
டில்லி சட்டசபையின் பொது நோக்கக் குழு கூட்டம், சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் நடந்தது.
நாட்டின் சுதந்திரப் போராட்டம், சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வி மறுமலர்ச்சிக்கு பங்காற்றியவர்களை கவுரவிக்கும் விதமாக வீர சாவர்க்கர், பண்டி மதன் மோகன் மாளவியா மற்றும் மகரிஷி தயானந்த சரஸ்வதி ஆகியோர் படங்களை டில்லி சட்டசபையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது நோக்கக் குழு உறுப்பினர் அபய் வர்மா சமர்ப்பித்த கோரிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகத்தை அளிக்கும், தேசபக்தி, சேவை மற்றும் ஜனநாயக லட்சியங்களின் மதிப்பை வலுப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமார் கூறியதாவது:
பொது நோக்கக் குழு உறுப்பினர்களான சீமாபுரி எம்.எல்.ஏ., வீர்சிங் திங்கன் மற்றும் சீலாம்பூர் எம்.எல்.ஏ., சவுத்ரி சுபைர் அஹமது ஆகியோர், சாவித்ரிபாய் புலே படத்தை சட்டசபையில் வைக்க முன்மொழிந்தனர். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பா.ஜ., அரசு பொறுப்பேற்றவுடன், பாபா சாகேப் அம்பேத்கர் படத்தை நீக்கியது. தலைசிறந்த ஆளுமைகளை அவமதிப்பதே பா.ஜ.,வின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஆதிஷி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
பா.ஜ., பெண்கள் மற்றும் கல்விக்கு எதிரான கட்சி. அதேபோல், தலித் எதிர்ப்பிலும் பா.ஜ., குறியாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்தும் சாவித்ரிபாய் புலே படத்தை சட்டசபையில் வைக்க பா.ஜ., அரசு அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மியில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:
சாவித்ரிபாய் புலே படத்தை சட்டசபையில் வைக்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், ஆம் ஆத்மி சார்பில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. வாய்மொழியாக மட்டும் தங்கள் கருத்துக்களை பொதுநோக்கக் குழு கூட்டத்தில் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.