அறுசுவை காய்கறியை விரும்பாதவர்களையும் ஈர்க்கும் 'வெஜிடபிள் பான் கேக்'
அறுசுவை காய்கறியை விரும்பாதவர்களையும் ஈர்க்கும் 'வெஜிடபிள் பான் கேக்'
ADDED : அக் 05, 2024 05:06 AM

சிறார்களுக்கு காய்கறிகள் சாப்பிடுவது என்றால், எட்டிக்காய் போன்று கசக்கும். அதிலும் காலை சிற்றுண்டிக்கு காய்கறிகளை கண்டு, பெரியவர்களும் முகத்தை சுளிப்பர். இவர்களுக்கு 'வெஜிடபிள்ஸ் பான் கேக்' செய்து தாருங்கள். சப்பு கொட்டி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - ஒரு கப்
முட்டைகோஸ் - ஒரு கப்
பீட்ரூட்- ஒரு கப்
குடமிளகாய் - ஒரு கப்
துருவிய கேரட் - ஒரு கப்
சிறிதாக வெட்டிய கொத்துமல்லி - நான்கு ஸ்பூன்
பீன்ஸ் - ஒரு கப்
அரிசி மாவு - 4 ஸ்பூன்
சோளமாவு - 4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - நான்கு
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
அமச்சூர் பவுடர் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1 அனைத்து காய்கறிகளையும், நீள நீளமாக வெட்டி கொள்ளுங்கள். அதில் சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய், உப்பு, சோளமாவு, அரிசி மாவு, கரம் மசாலாவை போட்டு கலக்கி வையுங்கள். 10 நிமிடம் ஊற விடுங்கள்.
2 அதன்பின் அந்த கலவையில் வெங்காயம், அமெச்சூர் பவுடர், கொத்துமல்லியை போட்டு மீண்டும் நன்றாக கிளறுங்கள். ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவுங்கள். இதில் காய்கறி கலவையை அதில் போட்டு கையால் தடிமனாக தட்டுங்கள். இதை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, பொன்னிறமாக வேக வையுங்கள்.
3 இதை சதுரம், சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ வெட்டி சூடாக பரிமாறுங்கள். இதுவே வெஜிடபிள்ஸ் பான் கேக். சிறு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். டயட்டில் இருப்போரும் இதை சாப்பிடலாம். காய்கறிகளை விரும்பாதவர்களும் விரும்பி சாப்பிடுவர். ஒரு முறை செய்து பாருங்கள்
. - நமது நிருபர் -