ADDED : மார் 21, 2025 03:46 AM

பெங்களூரு : ''கப்பன் பூங்காவில் பொது விடுமுறை நாட்களில், வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்,'' என சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் போசராஜு, மேல்சபையில் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு, தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் சார்பில் பதில் அளித்து, அமைச்சர் போசராஜு கூறியதாவது:
பொது விடுமுறை நாட்களில், சிறார்கள், பொது மக்கள் கப்பன் பூங்காவுக்கு வருகின்றனர். எனவே அவர்களுக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்பதற்காக, பூங்காவுக்குள் வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை வாகனங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
வாரந்தோறும் ஞாயிற்று கிழமை, மாதத்தில் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள், தேசிய பண்டிகைகள் உட்பட, அரசு விடுமுறை நாட்களில் கப்பன் பூங்காவுக்குள், வாகனங்கள் நுழைய தடை உள்ளது. பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரின் கோரிக்கை அடிப்படையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு அனுமதி இருக்கும். அனைத்து சனிக்கிழமைகளிலும் மாலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, ஐகோர்ட் பகுதியில் இருந்து சித்தலிங்கையா சதுக்கம் வரை; சித்தலிங்கையா சதுக்கத்தில் இருந்து, ஐகோர்ட் பகுதிக்கு வாகனம் செல்ல வாசல் திறந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்., - ஹரிபிரசாத்: கப்பன் பூங்காவில் பாம்புகள், தவளைகள் உள்ளன. எனவே விடுமுறை நாட்களில் வாகனங்களுக்கு வாய்ப்பு அளிக்காதது, நல்ல முடிவாகும்.