வாகனங்களுக்கு தடை, வி.வி.ஐ.பி., பாஸ் ரத்து; கும்பமேளாவில் கூட்ட நெரிசலுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் விதிப்பு
வாகனங்களுக்கு தடை, வி.வி.ஐ.பி., பாஸ் ரத்து; கும்பமேளாவில் கூட்ட நெரிசலுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் விதிப்பு
ADDED : ஜன 30, 2025 09:00 AM

லக்னோ: மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் 30 பேர் உயிரிழந்த நிலையில், வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா நிகழ்ச்சிகள் கடந்த 13ம் தேதி துவங்கின. அடுத்த மாதம், 26ம் தேதி வரை நடக்க உள்ள இந்த ஆன்மிக நிகழ்ச்சியில், 40 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
முக்கிய நாளான நேற்று புனித நீராடுவதற்காக, 10 கோடி பேர் குவிந்தனர். புனித நீராடல் துவங்குவதற்கு முன், திரிவேணி சங்கமத்தை நோக்கி மக்கள் திடீரென முன்னேற முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 30 பேர் உயிரிழந்ததாகவும்; 60 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பமேளாவின் கூட்ட நெரிசலுக்குப் பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* கும்பமேளா நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
* வி.வி.ஐ.பி., பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்த சிறப்பு பாஸ் மூலமாகவும் கும்பமேளா நடக்கும் இடத்தில் வாகனங்களை இயக்க முடியாது.
* கூட்ட நெரிசலைக் குறைக்க பிரயாக்ராஜின் அண்டை மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்படுகின்றன.
* பிப்ரவரி 4ம் தேதி வரை நகரத்திற்குள் நான்கு சக்கர வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அடுத்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வாரணாசி, அயோத்தி, சித்ரகூட் மற்றும் மிர்சாப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வருவர் என்பதால் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

