ADDED : நவ 01, 2024 11:20 PM
பெங்களூரு; ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதே ரீதியில் அதிகரித்தால், மக்கள் தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
சக்தி அதிகரிப்பு
வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தாராளமாக கடன் வசதிகளை அறிவிப்பதால், மத்தியதர மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. இதனால் புதிய கார்கள், பைக்குகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
மாநிலத்தில் 2013- - 14 ல் 1.63 கோடியாக இருந்த வாகனங்கள்; 2024 அக்., 31ன் கணக்குப்படி 3.27 கோடியாக ஏறுமுகமாகி உள்ளது.
புதிய வாகனங்கள் 1.30 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது. கார்கள் மற்றும் பயணியர் ஆட்டோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று மாநில போக்குவரத்து துறை அறிக்கை தெரிவிக்கிறது.
வாகனங்களின் அதிகரிப்பால், மாநில அரசுக்கு வருமானம் அதிகரித்த போதிலும் வாகன நிறுத்தம், வாகனப் புகை பிரச்னைகள் மற்றும் பொதுமக்களின் உடல்நல பாதிப்புகளும் அதிகரிக்கின்றன.
கடந்த 10 ஆண்டு கணக்குப்படி பெங்களூரு உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மூன்று மடங்கு வாகனங்கள் அதிகரித்துள்ளன. 2013- - 14ல் பெங்களூரில் 60 லட்சம் வாகனங்கள் இருந்தன. இப்போது 1.20 கோடி வாகனங்கள் உள்ளன.
பெங்களூரு மக்கள் தொகைக்கு ஈடாக வாகனங்களும் சம எண்ணிக்கையில் உள்ளன.
ஒவ்வொரு நாளும் 6,000 வாகனங்கள் புதிதாக வந்த வண்ணம் உள்ளன. இதே ரீதியில் அதிகரித்தால், மக்கள் தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.
காரணம் என்ன?
பெங்களூரு உட்பட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணங்கள்:
பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. வாழ்வின் அவசியமான ஒன்றாக வாகனங்களும் மாறியுள்ளன. கொரோனா காலத்தில் வாகனங்களின் அவசியத்தை மக்கள் உணர்ந்தனர்.

