கவர்னர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!: 'மூடா' முறைகேடு வழக்கில் சித்தராமையா 'திக் திக்'
கவர்னர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!: 'மூடா' முறைகேடு வழக்கில் சித்தராமையா 'திக் திக்'
ADDED : செப் 24, 2024 07:34 AM

பெங்களூரு: 'மூடா' முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் அளித்த அனுமதிக்கு எதிராக, முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதனால், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் சித்தராமையா முறைகேட்டில் ஈடுபட்டதாக, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்திருந்தார்.
முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அவர் புகார் அளித்தார்.
அமைச்சரவை கூட்டம்
இதற்கு விளக்கம் கேட்டு, முதல்வருக்கு கவர்னர் அனுப்பிய நோட்டீசுக்கு, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
நோட்டீசை திரும்பப் பெறும்படி கவர்னருக்கு ஆலோசனை கூறும் வகையில், அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஸ்நேமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும், முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னரிடம் அனுமதி கோரினர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ இன் படி, முதல்வர் மீது விசாரணை நடத்த, ஆகஸ்ட் 17ம் தேதி கவர்னர் அனுமதி அளித்தார்.
இதற்கு எதிராக மாநிலம் முழுதும், முதல்வர் உட்பட காங்கிரஸ் அமைச்சர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, ஆக., 19ம் தேதி, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் ரிட் மனுத் தாக்கல் செய்தார்.
12ல் வாதம் நிறைவு
இம்மனு மீது, முதல்வர் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி உட்பட அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதம், இம்மாதம் 12ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், மூடா முறைகேடு தொடர்பாக, முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, விசாரணையை ஒத்திவைக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
நடவடிக்கை
இந்நிலையில், கவர்னருக்கு எதிராக முதல்வர் தொடர்ந்த ரிட் மனு மீது, இன்று நண்பகல் 12:00 மணிக்கு, நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் மொத்த அரசியல் தலைவர்களின் பார்வையும் பெங்களூரு மீது திரும்பி உள்ளது.
இதற்கிடையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, மூத்த வக்கீல்களுடன், முதல்வர் சித்தராமையா, நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார்.
கவர்னர் அல்லது முதல்வர் இருவரில் யாருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உறுதி. இதற்காக, இரண்டு தரப்பு வக்கீல்களும் அங்கு தயார் நிலையில் உள்ளனர்.