தன்கருக்கு எதிரான நோட்டீஸ் தள்ளுபடி செய்த துணை தலைவர்
தன்கருக்கு எதிரான நோட்டீஸ் தள்ளுபடி செய்த துணை தலைவர்
ADDED : டிச 20, 2024 02:49 AM

புதுடில்லி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை, துணை தலைவர் ஹரிவன்ஷ் நேற்று தள்ளுபடி செய்தார்.
ராஜ்யசபா தலைவராக பதவி வகித்து வரும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
அவர் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டதால் அவரை சபை தலைவர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 60 பேர் கையெழுத்திட்ட நோட்டீஸ், கடந்த 10ம் தேதி பார்லிமென்ட் செயலகத்தில் அளிக்கப்பட்டது.
ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் முன், சபையின் செக்ரட்டரி ஜெனரல் பி.சி.மோடி, இந்த நோட்டீசை நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது, அரசியலமைப்பையும், துணை ஜனாதிபதி பதவியையும் இழிவுபடுத்தும் நோக்கில் அளிக்கப்பட்டுள்ள நோட்டீசை தள்ளுபடி செய்வதாக, துணை தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள விபரங்கள் குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
தனிப்பட்ட நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் உண்மைக்கு புறம்பானது, விளம்பர நோக்கம் உடையது. ஜனநாயகத்தையும், துணை ஜனாதிபதி பதவியையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அளிக்கப்பட்டுஉள்ளது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 67பி-யின் படி, பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கு 14 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும்.
இந்த குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையும் என்பதை நவம்பர் மாதமே அறிவித்துவிட்டோம்.
அப்படி இருக்கையில் இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வர இயலாது. அது தெரிந்தும் துணை ஜனாதிபதியை அவமதிக்கும் நோக்கில் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.