ADDED : ஆக 31, 2024 01:22 AM

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக உள்ள மூத்த வழக்கறிஞரும், எம்.பி.,யுமான கபில் சிபல் தெரிவித்த கருத்துக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள கே.ஜி. கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பெண் பயிற்சி
டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.
இதில், மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக இருக்கும் அவர், இதுபோன்ற வழக்குகளில் ஆஜரானதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கபில் சிபல் வெளியிட்ட அறிக்கையில், கோல்கட்டா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லுாரியில் நடந்த பலாத்கார சம்பவம் பெரிய நோய் என்றும், இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்ககூடியது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆதிஷ் அகர்வால் கண்டனம் தெரிவித்ததுடன், கபில் சிபல் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, டில்லி பாரதி கல்லுாரியில் நடந்த விழாவில் பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும், கபில் சிபலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், “உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராகவும், எம்.பி.,யாகவும் உள்ள நபர், பெண்களுக்கு எதிரான வன்முறை செயலை இவ்வாறு விமர்சித்தது மிகவும் வேதனையை தருகிறது.
இதுபோன்ற சம்பவங்களை எவ்வாறு சர்வ சாதாரணமானவை என்று அவரால் கூற முடியும்? அத்தகைய அவரது நிலைப்பாட்டை கண்டிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற பேச்சு, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல,”
என்றார்.