நிர்வாக நியமனங்களில் தலைமை நீதிபதி ஏன்: துணை ஜனாதிபதி கேள்வி
நிர்வாக நியமனங்களில் தலைமை நீதிபதி ஏன்: துணை ஜனாதிபதி கேள்வி
UPDATED : பிப் 15, 2025 02:53 PM
ADDED : பிப் 15, 2025 11:52 AM

போபால்: 'சி.பி.ஐ., இயக்குநர் நியமனம் உள்ளிட்ட நிர்வாக நியமன குழுவில், சட்டப்பூர்வ பரிந்துரை மூலம் கூட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எப்படி தலையிட முடியும்' என துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ம.பி., மாநிலம் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெக்தீப் தன்கர் பேசியதாவது: இந்தியாப் போன்ற ஒரு நாட்டில் அல்லது எந்த ஒரு ஜனநாயக அமைப்பில் சட்டப்பூர்வ பரிந்துரையின் படியே இருந்தாலும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எவ்வாறு சி.பி.ஐ., இயக்குநர் தேர்வில் ஈடுபட முடியும்.இதற்கு ஏதாவது ஒரு சட்டப்பூர்வ காரணம் இருக்க முடியுமா
அன்றைய நாளில் அரசு நிர்வாகி நீதித்துறையில் உத்தரவுக்கு கீழ்ப்படித்ததால் அந்த சட்டப்பூர்வ பரிந்துரை வடிவம் பெற்று இருக்கும் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதனை மாற்றுவதற்கான நேரம் இது. இந்த நடைமுறை ஜனநாயகத்துடன் ஒத்துப்போகவில்லை. அனைத்து அமைப்புகளும் அரசியலமைப்பு வரம்பிற்குள் செயல்பட வேண்டும்.
அரசுகள் என்பது பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு பொறுப்பு கூற வேண்டும். சில நேரங்களில் ஓட்டுப்போட்ட மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும். ஆனால், அரசு நி ர்வாகம் அதிகாரத்தால், அவுட்சோர்சிங் மூலம் நிர்வகிக்கப்பட்டால், பொறுப்பு கூறல் திறன் பலவீனம் அடையும். இவ்வாறு அவர் பேசினார்.