துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்: தலைவர்கள் வாழ்த்து
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்: தலைவர்கள் வாழ்த்து
UPDATED : ஆக 17, 2025 10:23 PM
ADDED : ஆக 17, 2025 10:18 PM

புதுடில்லி: தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
சி.பி ராதாகிருஷ்ணன் தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றால் பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகள், தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார்.
தமிழகத்தின் அடிமட்டத்தில் அவர் விரிவான பணிகளைச் செய்துள்ளார். எங்கள் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேஜ கூட்டணி முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். பார்லிமென்ட் உறுப்பினராக, கவர்னராக உங்களின் பங்கு அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
உங்கள் பரந்த அனுபவமும் ஞானமும் ராஜ்யசபாவின் கவுரவத்தை உயர்த்தும் என நம்புகிறேன்.இந்த முடிவுக்காக பிரதமர் மோடியையும், பாஜ பார்லி குழு உறுப்பினர்களையும் வாழ்த்துகிறேன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
துணை ஜனாதிபதி பதவிக்கான தேஜ கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். தற்போது மஹாராஷ்டிராவின் கவர்னராக இருந்த அவர், முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராக பணியாற்றினார். லோக்சபா எம்பியாகவும் பணியாற்றினார்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். பாஜ மூத்த தலைவரும், கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கும், பாஜ மூத்த தலைவர்களுக்கும் பாஜ தலைவர் நட்டாவுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜ தலைவராகவும், எம்பி ஆகவும், அவர் செய்த மக்கள் பணிகள், போற்றுதலுக்குரியவை. ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா மாநிலங்களின் கவர்னராகவும், வெகுசிறப்பாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
துணை ஜனாதிபதியாக அவர் வெகு சிறப்பாக மாநிலங்களைவையும், நாட்டையும் வழிநடத்துவார் என்பது உறுதி. அவருக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.