UPDATED : செப் 09, 2025 05:11 PM
ADDED : செப் 09, 2025 02:28 AM

புதுடில்லி: காலை 10 மணிக்கு துவங்கிய துணை ஜனாதிபதி தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 96 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, என்னென்ன விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும், எவ்வாறு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்து, அனைத்து எம்.பி.,க்களுக்கும் மாதிரி ஓட்டுப்பதிவு வாயிலாக நேற்று விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகளை ராஜ்யசபா செயலக அதிகாரிகள் செய்தனர்.
சிறப்பு பாதை
ஓட்டுப்பதிவு நடந்த பார்லிமென்ட்டின் முதல் தளத்தில் உள்ள, வசுதா அரங்கிற்கு, தரைதளத்தில் உள்ள மகர் துவார், ஷ்ரதுல் துவார் வாயில்கள் வழியாக, எம்.பி.,க்கள் உள்ளே செல்வதற்கு சிறப்பு பாதைகள் அமைக்கப்பட்டன. எம்.பி.,க்கள் தங்கள், 'மொபைல் போன்'களை வாயிலில் சமர்ப்பித்து, 'டோக்கன்' பெற்றுக் கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நீள்வாக்கில் அமைந்த அறை எண், 'எப் - 101' என்ற பெரிய ஹாலின் வலதுபுறம், நான்கு மேஜைகள் மற்றும் இருக்கைகள் போடப்பட்டன.
அதில், முதல் இருக்கையில் தேர்தல் அதிகாரி, 2வது, 3வது இருக்கைகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கான முகவர்களும், 4வது இருக்கையில் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும் அமர்ந்திருந்தனர்.
இதற்கு எதிராக, இடப்புறத்தில், ஆறு மேஜைகள் மற்றும் இருக்கைகள் போடப்பட்டன. இதில், தேர்தல் அலுவலர்கள் அமர்ந்து, ஓட்டுப்போட வரும் எம்.பி.,க்களுக்கு உதவி செய்தனர்.
இந்த இரு வரிசைகளை தாண்டி, வலதுபுறம் 3, இடதுபுறம் 3 என, மொத்தம் அறு அறைகள் அமைக்கப்பட்டன. அங்குபோய், எம்.பி.,க்கள் ஓட்டுகளை ரகசியமாக பதிவு செய்தனர்.
இதில் இரு அறைகள் மட்டும் சற்று விசாலமாக உள்ளன. சக்கர நாற்காலியில் வரும் எம்.பி.,க்களுக்காக, இந்த அறைகள் அமைக்கப்பட்டன.
முதல் நபர்
துணை ஜனாதிபதி தேர்தலில், முதல் நபராக பிரதமர் மோடி தனது ஓட்டை பதிவு செய்தார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சி தலைவர்களான சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டோரும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். மாலை 3 மணி நிலவரப்படி 96 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இன்னும் சற்று நேரத்தில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஓட்டுச்சாவடியில் '13 கட்டளைகள்'
1. மொபைல் மற்றும் கேமராவுக்கு, உள்ளே அனுமதி இல்லை
2. எம்.பி.,க்கான அடையாள அட்டையுடன் வர வேண்டும்
3. தேர்தல் அதிகாரி தரும் பேனாவைக் கொண்டுதான் ஓட்டுச்சீட்டில் குறிப்பிட வேண்டும்
4. சொந்த பேனாவை பயன்படுத்தினால் ஓட்டு செல்லாது
5. தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளர் எதிரே உள்ள 'ஆர்டர் ஆப் பிரிபரன்ஸ்' என்ற இடத்தில், '1' என்று குறிப்பிட வேண்டும்
6. வேட்பாளர் பெயருக்கு எதிரே, 'டிக்' அல்லது 'கிராஸ் மார்க்' செய்யக் கூடாது
7. அவ்வாறு டிக் அல்லது கிராஸ் செய்தால், செல்லாத ஓட்டாகிவிடும்
8. பெயர், கையெழுத்து உட்பட வேறு எந்த வார்த்தையும் எழுதக் கூடாது
9. ஓட்டுச்சீட்டில் வேறு எதுவும் கிறுக்கக் கூடாது
10. கிழிந்ததாக இருந்தால், வேறு ஓட்டுச்சீட்டு தரப்படும்
11. ஓட்டுச்சீட்டை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது
12. ஓட்டுப்பதிவின்போது, முற்றிலும் ரகசியம் காக்க வேண்டும்
13. அமைதி காத்து உரிய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இரவில் முடிவு வெளியாகும்
இன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 5:00 மணிக்கு முடியும். வாக்காளர் பட்டியலில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.ஐந்து ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் 233 பேரும், நியமன எம்.பி.,க்கள் 12 பேரும் ஓட்டளிப்பர்.
இதுதவிர, லோக்சபா எம்.பி.,க்கள் 543 பேரும் ஓட்டளிக்க உள்ளனர். ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 788 எம்.பி.,க்கள், ஓட்டு போடவுள்ளனர். மாலை 6:00 மணிக்கு, துவங்கும் ஓட்டு எண்ணிக்கை துரிதமாக நடைபெற்று, இன்று நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-நமது டில்லி நிருபர்-