லோக்சபா தேர்தலில் வெற்றி நிச்சயம்: ராகுல் நம்பிக்கை
லோக்சபா தேர்தலில் வெற்றி நிச்சயம்: ராகுல் நம்பிக்கை
ADDED : ஏப் 12, 2024 05:10 PM

திருநெல்வேலி: ‛‛ இந்திய ஜனநாயகம் காக்க மேற்கொண்டுள்ள இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் '', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசினார்.
குடும்ப உறவு
திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது : தமிழக மக்களிடம் நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல; குடும்ப உறவு. தமிழகத்திற்கு வருவதை நான் மிகவும் நேசிக்கிறேன். ஒவ்வொரு முறை வரும் போது தமிழக மக்கள் பேரன்பை வெளிப்படுத்துகின்றனர். தமிழக மக்களின் கலாசாரம், மொழி, பண்பாடு ஆகியவை எனக்கு ஆசான். தமிழ் பேசி தெரியாத என்றாலும் தமிழ் பண்பாட்டு கூறுகளை அறிந்து கொள்கிறேன். இந்தியாவில் உள்ள எந்த மொழியை விடவும் தமிழ் மொழி குறைந்துவிடவில்லை.
முக்கியமானவை
தமிழக மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன். சமூக நீதி பார்வையில் எப்படி நடப்பது என்பதை நாடு முழுமைக்கும் தமிழகம் காட்டி கொண்டுள்ளது. தமிழக விவசாயிகள் போராடிய போது அவர்களின் வலியை எனது வலியாக உணர்ந்தேன். தமிழ் மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கின்றேன். உங்கள் மொழி பாரம்பரியம் வரலாறு போன்றவை எங்களது அரசியலுக்கு முக்கியமானவை. தமிழ், வங்காளம் உள்ளிட்ட மொழிகள் இல்லாமல் இந்தியா என்ற நாடே இல்லை. இந்தியாவில் அனைத்து கலாசாரங்களையும் காங்கிரஸ் மதிக்கிறது.
ஏற்றத்தாழ்வு
இந்தியாவை புரிந்து கொள்ள விரும்பும் போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். இந்தியாவில் இரு தத்துவங்களுக்கு இடையே போர் நடந்து கொண்டு உள்ளது. ஒரே நாடு ஒரே தலைவர் ஒரே மொழி என்பது மோடியின் தத்துவம். ஆங்கிலேயர்கள் ஆண்ட இந்தியாவை விட தற்போதைய இந்தியா, சமச்சீர் அற்றதாக உள்ளது. இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை. தேர்தல் ஆணையர்களை கூட பிரதமர் தான் தேர்வு செய்கிறார்.
கடன் தள்ளுபடி
45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. 83 சதவீத இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 25 பெருங்கோடீஸ்வரர்கள், நாட்டின் 75 சதவீத பணத்தை வைத்து உள்ளனர். நாட்டில் ஒவ்வொரு நாளும் 13 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசு, பணக்காரர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்கிறது. தமிழகத்தைச் சாராத 2 , 3 தொழிலதிபர்கள் மட்டுமே மத்திய அரசின் அனைத்து ஒப்பந்தங்களையும் பெறுகிறார்கள். அதானிக்கு மட்டுமே துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழங்கப்படுகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள், ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கையால் சீர்குலைக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றன. லோக்சபா தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். நாட்டின் 2,3 கோடீஸ்வரர்களுக்கு மட்டும் இயற்கை வளங்களை வழங்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பாராமுகம்
தமிழகம் வெள்ள நிவாரண தொகை கேட்கும் போது மத்திய அரசு வழங்கவில்லை.தமிழர்கள் உதவி கேட்கும் போது அதை பிச்சை என இழிவுபடுத்துகின்றனர். தமிழக மீனவர்கள் உதவி கேட்கும் போது மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. அரசியல்சாசனத்தை மாற்றப்போவதாக பா.ஜ, எம்.பி.,க்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
சட்டம்
மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். படித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தனியாக சட்டம் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு குறித்த முடிவு மாநில அரசுகளிடம் வழங்கப்படும். தமிழக மக்கள், தங்களுடைய கல்வித்தரம், கல்வி முறையை முடிவு செய்வார்கள். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றுவோம். ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம். இந்தியாவில் இருந்து வறுமையை நிரந்தரமாக ஒழிப்பது என உறுதிபூண்டுள்ளோம்.
இரு மடங்கு
அரசு வேலைகளில் 50 சதவீதத்தை பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக பார்லிமென்ட், சட்டசபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம். விவசாயிகளைப் போலவே மீனவர்களும் முக்கியமானவர்கள். மீனவர்களின் படகுகளுக்கு காப்பீடு, டீசலுக்கு மானியம், கிரெடிட் கார்டு வழங்கப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் இரு மடங்காக்கப்படும்.
தொட முடியாது
கலாசாரம் மொழி வரலாற்றை பாதுகாக்க காங்கிரசும் நானும் உடன் நிற்போம். பண்பாடு, கலாசாரம், மொழிக்காக நாங்கள் தொடுத்துள்ள யுத்தம் தான் இந்த தேர்தல். இந்திய ஜனநாயகம் காக்க மேற்கொண்டுள்ள இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மோடி மட்டுமல்ல, உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட முடியாது. தமிழக மக்களோடு காங்கிரஸ் என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.

