நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி; நக்சல் இல்லாத பகுதியாக மாறியது பரபரப்பான அபுஜ்மர் வனப்பகுதி!
நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி; நக்சல் இல்லாத பகுதியாக மாறியது பரபரப்பான அபுஜ்மர் வனப்பகுதி!
ADDED : அக் 16, 2025 07:34 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் வடக்கு பஸ்தரில் உள்ள அபுஜ்மர் மலைப்பாங்கான வனப்பகுதியை நக்சலைட்டுகள் 170 பேர் சரணடைந்ததை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நக்சல் இல்லாத பகுதியாக அறிவித்தார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் பயங்கரவாதத்தின் மையமாக இருந்த சத்தீஸ்கரில் உள்ள அபுஜ்மத் மற்றும் வடக்கு பஸ்தார் இன்று நக்சலைட் வன்முறையிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயம். இப்போது, தெற்கு பஸ்தரில் ஒரு சில நக்சலைட்டுகள் மட்டுமே உள்ளனர், அவர்களை நமது பாதுகாப்புப் படைகள் விரைவில் ஒழிக்கும்.
ஜனவரி 2024ல் சத்தீஸ்கரில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 2,100 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர், 1,785 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர், மேலும் 477 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2026ம் ஆண்டு மார்ச் 3ம் தேதிக்குள் நக்சலைட்டை வேரறுக்க வேண்டும்.நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றி. சத்தீஸ்கரில் நேற்று 27 நக்சலைட்டுகள் சரணடைந்ததைத் தொடர்ந்து இன்று நக்சலைட்டுகள் 170 பேர் சரணடைந்தனர்.
மஹாராஷ்டிராவில், நேற்று 61 நக்சலைட்டுகளும் சரணடைந்தனர். கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 258 இடதுசாரி பயங்கரவாதிகள் வன்முறையைக் கைவிட்டனர். வன்முறையைக் கைவிட்டு இந்திய அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க அவர்கள் எடுத்த முடிவிற்கு நான் அனைவரையும் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி தலைமையில் அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது.
நக்சலைட்டுகளுக்கு எதிரான எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது. சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், ஆனால் தொடர்ந்து ஆயுதம் ஏந்துபவர்கள் நமது பாதுகாப்புப் படையினரிடமிருந்து கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து நக்சலைட்டுகளும் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.